நீ மேலே உயரும்போது நீ யார் என்று உன் நண்பர்கள் அறிந்து கொள்வார்கள் நீ கீழே போகும்போதுதான் உண்மையான நண்பர்கள் யார் என்று நீ அறிந்து கொள்வாய்...

4.08.2012

ராஜீவ் காந்தி கொலை-7

ராஜீவ் காந்தி கொலை-7
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றப்பத்திரிகையில் மேலும் கூறப்பட்டு இருந்ததாவது:-
 
"21_5_1991 இரவு, விசாகப்பட்டினத்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்து சேர்ந்த ராஜீவ் காந்தி, விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். சென்னையிலிருந்து புறப்பட்டு, இரவு 10.10 மணிக்கு ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூருக்கு போய்ச் சேர்ந்தார். அங்குள்ள இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, சிவப்பு கம்பளம் விரித்த இடத்திற்கு வந்து இறங்கினார். மேடை நோக்கி சென்றார். வழியில் போடப்பட்ட மாலைகள், சால்வைகளை ராஜீவ் காந்தி சிரித்த முகத்துடன் வாங்கிக் கொண்டார். அப்போது கோகிலா என்ற சிறுமி, ராஜீவ் காந்தியைப் புகழ்ந்து இந்தியில் எழுதப்பட்ட கவிதை ஒன்றை படித்தாள். கோகிலாவை ராஜீவ்காந்தி தட்டிக் கொடுத்தார். ராஜீவ் காந்திக்கு மாலை அணிவிப்பது போல் வந்த தனு, இடுப்பில் கட்டியிருந்த சுவிட்சை அழுத்தி வெடி குண்டை வெடிக்கச் செய்தாள். குண்டு வெடித்தபோது, ராஜீவ் காந்தி, தனு, போட்டோ எடுத்துக்கொண்டிருந்த அரிபாபு, கோகிலா உள்பட பிணமாக கிடந்த அரிபாபு அருகே, அவன் பயன்படுத்திய கேமிராவும் கிடந்தது.
 
(அந்த கேமிராவில் பதிவாகி இருந்த சிவராசன், தனு, சுபா, நளினி ஆகியோரின் புகைப்படங்கள்தான் கொலையில் துப்பு துலக்க உதவின.) ராஜீவ் கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து, சிவராசன், நளினி, சுபா ஆகியோர் ஸ்ரீபெரும்புதூர் ஊருக்குள் விரைந்தோடினர். அங்கு ஒரு வீட்டில் தண்ணீர் வாங்கிக் குடித்தனர். பிறகு 3 ஆட்டோக்களில் மாறிமாறி பயணம் செய்து சென்னை வந்து சேர்ந்தனர். பின்பு, கொடுங்கைïர் சென்று ஜெயகுமார் வீட்டில் தங்கினர். மறுநாள் காலையில், பக்கத்து வீட்டில் அமர்ந்து ராஜீவ் கொலை செய்யப்பட்ட செய்தியை படித்தனர். அரிபாபுவின் கேமிராவில் இருந்த போட்டோக்களை வைத்து, கொலையாளிகளை சி.பி.ஐ. தேடி வந்தது. எனவே, சிவராசன், சுபா ஆகியோரை பத்திரமாக இலங்கைக்கு அழைத்துச் செல்ல சிலரை விடுதலைப்புலிகள் இயக்கம் அனுப்பி வைத்தது. ஆனால், வரும் வழியில் அவர்கள் கடலில் மூழ்கி இறந்து விட்டனர். கொட்டிவாக்கத்தில் உள்ள வீட்டில் சிவராசன் தனது பொருட்களை வைத்து இருந்தான். அவற்றை 27_7_1991_ல் சி.பி.ஐ. கைப்பற்றியது. அங்கு சிக்கிய டைரியில் எல்லோரது பெயர்களும், மற்றும் பல விவரங்களும் இருந்தன.
 
பின்னர் டேங்கர் லாரி மூலம் சிவராசன், சுபா ஆகியோர் பெங்களூருக்கு தப்பிச்சென்றனர். 16_8_1991 அன்று பெங்களூர் கோனேகுண்டே என்ற இடத்தில் உள்ள வாடகை வீட்டிற்கு சிவராசன் கோஷ் டியினர் குடியேறினார்கள். 18_8_1991 அன்று போலீசார் அந்த வீட்டை முற்றுகையிட்டனர். 19_8_1991 அன்று சுபா சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டாள். சிவராசன் தனது துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டான். இவ்வாறு குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. சென்னை செசன்சு கோர்ட்டு வளாகத்தில் இந்த வழக்கை நடத்தினால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது சிரமம் என்றும், மற்ற கோர்ட்டுகளுக்கு வரும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாவார்கள் என்றும் சி.பி.ஐ. கருதியது. எனவே, பூந்தமல்லி கோர்ட்டுதான் இதற்கு சரியான இடம் என்று சென்னை ஐகோர்ட்டும், தமிழக அரசும் முடிவு செய்தன. இதைத்தொடர்ந்து, பூந்தமல்லி கோர்ட்டு வளாகத்தில் புதிய விசேஷ பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
 
26 கைதிகளும் தங்குவதற்கு பாதுகாப்புடன் ஜெயில் அறைகள் அமைக்கப்பட்டன. ஜெயிலில் இருந்து தனிக்கோர்ட்டுக்கு சுரங்கப்பாதை வழியாக கைதிகளை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. நீதிபதி முன்னால் குற்றவாளிகள் கூண்டுக்குள்ளேயே இருந்து பதில் சொல்லும் வகையில் கோர்ட்டு அமைப்பு செய்யப்பட்டிருந்தது. 3_1_1993 முதல் பூந்தமல்லி கோர்ட்டில் விசாரணை தொடங்கியது. தனிக்கோர்ட்டு நீதிபதி சென்னையில் இருந்து அவ்வப்போது பூந்தமல்லி சென்று கைதிகளின் காவல் நீடிப்பை செய்து வந்தார். 3_3_1993 முதல் பூந்தமல்லி தனிக்கோர்ட்டு நிரந்தரமாக செயல்படத்தொடங்கியது. மே மாதம் 5_ந்தேதி முதல்கட்ட விசாரணை தொடங்கியது. குற்றச்சாட்டுகளை நிரூபிக்க ஆதாரம் உள்ளது என்று சி.பி.ஐ. தரப்பில், கோர்ட்டில் வாதாடப்பட்டது. சி.பி.ஐ. பப்ளிக் பிராசிகிïட்டர் ஜேக்கப் டேனியல் தமது வாதத்தில், ஏன் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டார்.
 
சதித்திட்டம் எவ்வாறு உருவாயிற்று என்று விளக்கினார். அவர் மேலும் கூறியதாவது:_ "இந்த நூற்றாண்டில் ராஜீவ்காந்தி கொலை வழக்கு தனித்தன்மை உடையது. இந்தியத் தலைவர் ஒருவரை, பிற நாட்டினர் மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்தது இதுவே முதல் தடவை. 1985_ல் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அமெரிக்கா சென்றார். "மனித குலத்திற்கு சேவை செய்யும் வகையில் இந்தியாவை உருவாக்குவேன்" என்று அவர் பேசினார். 1991_ல் அவர் மீண்டும் பிரதமராக வாய்ப்பு இருந்தபோது, பயங்கரவாத செயலுக்கு பலியாக்கப்பட்டு விட்டார்". இவ்வாறு சி.பி.ஐ. வக்கீல் கூறினார். "ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறப்பு புலனாய்வுத்துறையினர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்கக்கூடாது" என்று, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வக்கீல் எஸ்.துரைசாமி உள்பட பல வக்கீல்கள் தனிக்கோர்ட்டில் வாதம் செய்தனர்.
 
"ஒரு அரசுக்கு எதிராக சதி செய்தால், அல்லது பயங்கரவாதத்தில் ஈடுபட்டால் மட்டுமே தடா சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியும். தனிப்பட்ட மனிதரான ராஜீவ் காந்தியை கொல்ல சதித்திட்டம் நடந்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் `தடா' சட்டத்தின் கீழ் இந்த வழக்கை பதிவு செய்தது தவறு" என்று, வக்கீல் எஸ்.துரைசாமி கோர்ட்டில் கூறினார். பொட்டு அம்மான், அகிலா என்ற பெயர்களில் எவருமே இல்லை என்றும், இவர்கள் கற்பனை கதாபாத்திரங்கள் என்றும், அப்படி இருக்க, சதித்திட்டம் எவ்வாறு உருவாயிருக்க முடியும் என்று நளினி தரப்பில் வாதிடப்பட்டது. "தனு (மனித வெடிகுண்டு) தனது உடலில் பெல்டை கட்டிக்கொண்டிருந்தாள் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. அவள் பெல்டை இடுப்பில் கட்டிக்கொண்டு பஸ்சில் ஸ்ரீபெரும்புதூருக்கு அழைத்து வரப்பட்டாள் என்பதை ஏற்க முடியாது" என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை நிராகரித்துவிட்டு, குற்றச்சாட்டுகளை தனிக் கோர்ட்டு பதிவு செய்தது. இந்த முதல் கட்ட விசாரணைக்கு மட்டும் பத்திரிகை நிருபர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதன் பின்னர், சாட்சிகள் விசாரணையின்போது நிருபர்கள் அனுமதிக்கப்படவில்லை.