ராஜீவ் காந்தி
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 26 பேர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு இருந்ததாவது:-
"அமைதிப்படையை
இலங்கைக்கு அனுப்பியதால் ராஜீவ் காந்தி மீது விடுதலைப்புலிகள் தலைவர்
பிரபாகரனுக்கு விரோதம் இருந்தது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும்,
இலங்கை ராணுவத்தினருக்கும் இடையே போர் நடந்து வந்தது. அப்போது இந்தியப்
பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு
அமைதிப்படையை அனுப்பினார். விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கவேண்டும்
என்று ஒப்பந்தம் ஏற்பட்டது.
முன்னதாக
இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்த 1987_ம் ஆண்டு ஜனவரி மாதம்
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டார். டெல்லி
அசோகா ஓட்டலில் தங்கியிருந்த தன்னை கட்டாயப்படுத்தி ஒப்பந்தத்தில்
கையெழுத்து வாங்கியதாக பிரபாகரன் குற்றம் சாட்டினார். "ராஜீவ்காந்தி என்
முதுகில் குத்திவிட்டார்" என்று கூறினார்.
யாழ்ப்பாணத்தில்
புலேந்திரன், குமரப்பா உள்பட 17 பேர்களை அமைதிப்படையினர் பிடித்து இலங்கை
அரசிடம் ஒப்படைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து `திலீபன்' உண்ணாவிரதம்
இருந்தார். இந்தப் பிரச்சினையில் விடுதலைப்புலிகளுக்கு உதவ ராஜீவ்காந்தி
மறுத்துவிட்டார்.
இலங்கை
அரசிடம் ஒப்படைக்கப்பட்ட 17 விடுதலைப்புலிகளும் சயனைடு விஷம் சாப்பிட்டு
தற்கொலை செய்து கொண்டார்கள். இதனால் ராஜீவ் காந்தி மீது பிரபாகரனுக்கு
இருந்த கோபம் அதிகரித்தது. பின்னர் வி.பி.சிங் பிரதமரானார். அவர் ஆட்சி
கவிழ்ந்து, 1991_ல் தேர்தல் வருவதாக இருந்தது.
ராஜீவ்
காந்தி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பழைய ஒப்பந்தத்தை அமுல்படுத்தி
விடுவார் என்ற அச்சம் விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்டது. இதனால் ராஜீவ்
காந்தியை தீர்த்துக்கட்ட விடுதலைப்புலிகள் திட்டம் வகுத்தனர். இதன் பிறகு,
1991_ம் ஆண்டு ஜனவரி மாதம் விடுதலைப்புலி முருகனை யாழ்ப்பாணத்தில் இருந்து
பொட்டு அம்மான் அனுப்பி வைத்தார்.
இந்திய
மக்களிடம் சகஜமாக பழகி காரியத்தை வெற்றிகரமாக முடிக்கவேண்டும் என்று
பொட்டு அம்மான் உத்தரவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து, சென்னை
ராயப்பேட்டையில் வசித்த நர்சு பத்மா, நளினி ஆகியோரிடம் நன்றாக பழகி முருகன்
அக்குடும்பத்தில் ஒருவரானார். இதன் பிறகு 1991_ம் ஆண்டு மே மாதம்
ஒற்றைக்கண் சிவராசன் தமிழ்நாட்டுக்கு வந்தான்.
அவனுடன்
சின்னசாந்தன், தனு, சுபா, டிரைவர் அண்ணா, விஜயன், சங்கர் ஆகிய
விடுதலைப்புலிகளும் சென்னைக்கு வந்தனர். கொடுங்கைïரில் உள்ள ஜெயகுமார்
வீட்டில் சிவராசன் தங்கினான். தனுவும், சுபாவும் அங்கு தங்கினார்கள். அங்கு
"வயர்லெஸ்" கருவி அமைக்கப்பட்டது.
"ராஜீவ்
காந்தி போன்ற தலைவர்களை எப்படி நெருங்கிச் சென்று கொலை செய்வது" என்பதற்கு
ஒத்திகை பார்க்க சிவராசன் திட்டமிட்டான். 8_5_1991 அன்று வி.பி.சிங்
சென்னையில் ஒரு கூட்டத்தில் பேசுவதாக இருந்தார். அந்த கூட்டத்தை
ஒத்திகைக்களமாக சிவராசன் பயன்படுத்திக் கொண்டான். 8_5_1991 அன்று
வி.பி.சிங் சென்னை நந்தனம் பொதுக்கூட்டத்தில் பேசினார்.
சிவராசன்
பத்திரிகையாளர்கள் அமரும் இடத்தில் உட்கார்ந்து கொண்டான். அங்கு தனு,
சுபா, நளினி, அரிபாபு, பேரறிவாளன், முருகன் ஆகியோர் வந்திருந்தனர்.
தனு
கூட்டத்தோடு கூட்டமாக சென்று வி.பி.சிங்கிற்கு மாலை அணிவித்தாள். இதில்
அவளுக்கு வெற்றி கிடைத்தது. இதுபற்றி பொட்டு அம்மானுக்கு, தனுவும்,
சுபாவும் கடிதம் எழுதினார்கள்.
மே மாதம் 2_ந்தேதி பேரறிவாளன் வயர்லெஸ் கருவியை இயக்க ஒரு எக்சைடு பேட்டரியை சிவராசனுக்கு வாங்கிக் கொடுத்தான்.
பின்பு
தனு இயக்க இருக்கும் மனித வெடிகுண்டிற்கு 2 பாட்டரிகளையும் சிவராசனுக்கு
வாங்கிக் கொடுத்தார். ராஜீவ் காந்தி தமிழ்நாட்டுக்கு 21_ந்தேதி வருகிறார்
என்று 19_ந்தேதியே பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன. இதை சிவராசன்
தெரிந்து கொண்டான்.
மறுநாள்
தனுவுடன் சிவராசன் மைலாப்பூரில் உள்ள கல்யாணி நர்சிங் ஹோம் சென்றான்.
அங்கு நர்சாக இருக்கும் பத்மாவிடம் தனுவுக்காக "புரூபன் கேப்ஸ்" என்ற
மாத்திரையை வாங்கினான்.
"ராஜீவ்
காந்திக்கு அணிவிக்க ஒரு மாலையை வாங்கிக்கொண்டு நாளை 5 மணிக்கு வா" என்று
அரிபாபுவிற்கு சிவராசன் உத்தரவிட்டான். இதேபோல வில்லிவாக்கத்தில் உள்ள
வீட்டில் நளினியை பிற்பகல் 3 மணிக்கு தயாராக இருக்கும்படி சிவராசன்
கூறினான்.
இதன் பிறகு நேராக கொடுங்கைïரில் உள்ள விஜயன் வீட்டிற்கு சிவராசன் சென்றான். அங்கு தனு, சுபா ஆகியோர் தங்கி இருந்தனர். சிவராசன் வந்ததும் தனு பெல்டில் குண்டை கட்டிக்கொண்டு, மேலே சுடிதாரை அணிந்து கொண்டாள். இந்த சுடிதார் புரசைவாக்கத்தில் தைக்கப்பட்டதாகும். இதன் பிறகு சுபா, தனு, சிவராசன் ஆகியோர் வில்லிவாக்கம் சென்று நளினியை பார்த்தனர். நளினியுடன் இவர்கள் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்கள். 5 மணிக்கு பிராட்வே பஸ் நிலையத்திற்கு 4 பேரும் போய்ச்சேர்ந்தனர்.
அங்கு மாலையுடன் தயாராக காத்திருந்த அரிபாபுவை சந்தித்தனர். பிறகு காஞ்சீபுரம் பஸ்சில் ஏறி ஸ்ரீபெரும்புதூருக்கு சென்றனர். இரவு 7 மணிக்கு சென்றடைந்த அவர்கள் அங்குள்ள ஓட்டலில் சாப்பிட்டனர். பிறகு பூ வாங்கிக்கொண்டு பொதுக்கூட்டம் நடக்கும் மேடை அருகே வந்தனர். சுபா, நளினி இருவரும் மேடை முன்பு பொது மக்களோடு தரையில் அமர்ந்து கொண்டனர். சிவராசன் நிருபர் போல நின்று கொண்டான்.
