குழந்தைப் பருவம்:
தமிழ்த்திரை
உலகிலும், பின்னர் அரசியலிலும் சகாப்தம் படைத்த எம்.ஜி.ஆரின் முழுப்பெயர்
எம்.ஜி.ராமச்சந்திரன். பெற்றோர் பெயர் கோபாலமேனன் _சத்யபாமா. இவர்களது
முன்னோர்கள், கொங்கு நாட்டிலிருந்து கேரளாவில் குடியேறிய மன்றாடியார்கள்
என்று எம்.ஜி.ஆரே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
அரூர்,
திருச்சூர், கரூர், எர்ணாகுளம் முதலிய ஊர்களில் மாஜிஸ்திரேட்டாகப்
பணியாற்றியவர், கோபாலமேனன். நீதி தவறாதவர். அநீதிக்குத் துணை போக
மறுத்ததால், வேறு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். அதனால் வேதனை அடைந்த கோபால
மேனன் பதவியை ராஜினாமா செய்தார். மனைவியுடன் இலங்கை சென்றார்.
கோபாலமேனன்
_ சத்தியபாமா தம்பதியினர் இலங்கையில் வசித்த போது, 1917_ம் ஆண்டு ஜனவரி
17_ந்தேதி சுவாதி நட்சத்திரத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தார். கண்டியில்
இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹந்தானா என்ற இடத்தில்
எம்.ஜி.ஆர். பிறந்தார். அந்த இடம், தமிழில் "பச்சைக்காடு" என்று
அழைக்கப்படுகிறது.
எம்.ஜி.ஆர். பிறந்த வீட்டில்
இப்போது ஒரு பாடசாலை நடந்து வருகிறது. எம்.ஜி.ஆருக்கு எம்.ஜி.சக்ரபாணி,
பாலகிருஷ்ணன் என்று இரண்டு அண்ணன்கள். கமலாட்சி, சுபத்ரா என்ற இரண்டு
தமக்கைகள். நான்கு குழந்தைகளுக்குப்பின் கடைக்குட்டியாகப் பிறந்தவர்
எம்.ஜி.ஆர். பாலகிருஷ்ணன், கமலாட்சி, சுபத்ரா ஆகிய மூவரும் சிறு வயதிலேயே
இறந்து விட்டனர்.
சக்ரபாணியையும், எம்.ஜி.ஆரையும்
கோபால மேனனும், சத்யபாமாவும் மிகுந்த அன்புடன் வளர்த்து வந்தனர்.
எம்.ஜி.ஆருக்கு 2 வயதானபோது, குடும்பத்துடன் தாயகம் திரும்பினார்,
கோபாலமேனன். முன்பு செல்வச் செழிப்புடன் வாழ்ந்த அவர் குடும்பம்,
ஒத்தப்பாலம் என்ற இடத்தில் வாடகை வீட்டில் வசித்தது.
1920_ம்
ஆண்டில், கோபாலமேனன் திடீரென்று மாரடைப்பால் காலமானார். அப்போது
எம்.ஜி.ஆருக்கு மூன்று வயது. கணவரை இழந்த சத்யபாமா, தன் இரண்டு மகன்களையும்
வளர்த்து ஆளாக்குவது எப்படி என்று திகைத்தார். அவருடைய தம்பி நாராயணனும்,
குடும்ப நண்பர் வேலு நாயரும் அப்போது கும்பகோணத்தில் வசித்து வந்தார்கள்.
ஆகவே,
தன் இரு மகன்களுடன் கும்பகோணத்துக்கு வந்தார், சத்தியபாமா. நாராயணன், இளம்
வயதிலேயே கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வந்து குடியேறியவர்.
கும்பகோணத்தில் தங்கி, "மதுரை ஒரிஜினல் பாய்ஸ்" நாடகக் கம்பெனியில்
பின்பாட்டுப் பாடிப் பிழைத்து வந்தார். குழந்தைகளுடன் ஆதரவு தேடி வந்த
அக்காவுக்கு அவர் ஒரு வீடு பார்த்துக் கொடுத்தார்.
கும்பகோணம்
ஆணையடிப்பள்ளியில் சக்ரபாணியும், எம்.ஜி.ஆரும் சேர்ந்தார்கள். எம்.ஜி.ஆரை
விட சக்ரபாணி நான்கு வயது மூத்தவர். எனவே, குடும்ப நிலைமையை ஓரளவுக்கு உணர
முடிந்தது. பள்ளிக்குப் போகும் நேரம் தவிர மற்ற நேரங்களில் சிறு சிறு
வேலைகள் செய்து, கொஞ்சம் பணம் சம்பாதித்தார்.
இலங்கையிலிருந்து கொண்டு வந்திருந்த பணமும், நகைகளும் தீரும் வரை, வாழ்க்கைச் சக்கரம் சிக்கலின்றி சுழன்றது.
அதன்பிறகு,
தன் குழந்தைகளை வளர்க்க சத்ய பாமா மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது.
`எப்படியும் பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து முன்னுக்குக் கொண்டுவர
வேண்டும்' என்ற உறுதியுடன் சோதனைகள் அனைத்தையும் தாங்கிக்கொண்டார்.
