நீ மேலே உயரும்போது நீ யார் என்று உன் நண்பர்கள் அறிந்து கொள்வார்கள் நீ கீழே போகும்போதுதான் உண்மையான நண்பர்கள் யார் என்று நீ அறிந்து கொள்வாய்...

4.08.2012

எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின் ஜானகி அம்மாளின் மந்திரிசபை 24 நாட்களில் கவிழ்ந்தது

எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின் ஜானகி அம்மாளின் மந்திரிசபை 24 நாட்களில் கவிழ்ந்தது

 
எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின், அடுத்த முதல்_அமைச்சர் யார் என்பதில் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது. தற்காலிக முதல்_அமைச்சர் பொறுப்பில் இருந்த நெடுஞ்செழியன் 28_12_1987 அன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், முதல்_அமைச்சர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.
 
கவர்னர் குரானாவை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் சந்தித்து, எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகி அம்மாளுக்குத்தான் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என்றும், முதல்_அமைச்சர் தேர்தலில் அவர் போட்டியிடுவார் என்றும் தெரிவித்தார். 31_12_1987 அன்று ஜானகி அம்மாள் விடுத்த அறிக்கையில், அ.தி.மு.க.வில் உள்ளவர்களில் பெரும்பான்மை யோரின் விருப்பத்திற்கு இணங்க முதல்_அமைச்சர் பதவி ஏற்க சம்மதிப்பதாகவும், நாவலர் உள்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
 
நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், அரங்க நாயகம், திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்கள் கூடி, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஜெயலலிதாவை தேர்ந்தெடுத்திருப்பதாக அறிவித்தனர். இது செல்லாது என்று, ஜானகி அம்மாளின் ஆதரவாளர்கள் கூறினார்கள்.
 
அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் 97 பேர் கூடி, ஜானகி அம்மாளை முதல்_அமைச்சராகத் தேர்ந்தெடுத்து, அந்தத் தகவலை கவர்னருக்கு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, புதிய மந்திரிசபை அமைக்கும்படி ஜானகி அம்மாளுக்கு கவர்னர் அழைப்பு விடுத்தார். இந்தத் தகவல் நெடுஞ்செழியனுக்குத் தெரிவிக்கப்பட்டது.
 
அவர், இடைக்கால முதல்_அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.   ஜானகி அம்மாள் தலைமையிலான மந்திரிசபை 6_1_1988 அன்று பதவி ஏற்றது. 25_ந்தேதி சட்டசபை கூடும் என்றும், அதில் கவர்னர் உரை நிகழ்த்துவார் என்றும், 28_ந்தேதி சட்டசபையில் ஜானகி அம்மாள் தன் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.
 
ஜெயலலிதா _ நெடுஞ்செழியன் அணியை ஆதரித்த 29 சட்டசபை உறுப்பினர்கள், கட்சி தாவிவிடக்கூடாது என்பதற்காக, ரகசியமான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டனர்.   ஜெயலலிதா அவசரமாக டெல்லி சென்று, பிரதமர் ராஜீவ் காந்தியைச் சந்தித்தார். தனது அணியை ஆதரிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
 
இரண்டு அணியாகப் பிளவுபட்டுவிட்ட அ.தி.மு.க.வை தன்னால் ஆதரிக்க முடியாதென்றும், ஒன்றுபட்ட அ.தி.மு.க.வையே ஆதரிக்க இயலும் என்றும் ராஜீவ் காந்தி பதில் அளித்தார். அதைத்தொடர்ந்து, இரு கோஷ்டியினரும் பலப்பரீட்சைக்குத் தயாரானார்கள்.   நம்பிக்கைத் தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பதற்காக 28_ந்தேதி சட்டசபை கூடியபோது, வரலாறு காணாத அளவுக்கு கலவரம் மூண்டது.
 
இரு தரப்பினரும் ஒலிபெருக்கிகளை உடைத்து அடித்துக்கொண்டனர். செருப்புகளும், சோடா பாட்டில்களும் வீசப்பட்டன. சட்டசபையே போர்க்களமாக மாறியது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, சமூக விரோதிகள் ஆயுதங்களுடன் சட்டசபைக்குள் புகுந்து, கண் மூடித்தனமாகத் தாக்கினார்கள். பல எம்.எல்.ஏ.க்கள் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
 
இவ்வளவு கலவரங்களுக்கு இடையே, 33 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்திருப்பதாகவும், ஜானகி அம்மாள் கொண்டு வந்த நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேறிவிட்டதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.   ஜானகி அம்மாள் மந்திரிசபையை 30_1_1988 அன்று மத்திய அரசு டிஸ்மிஸ் செய்தது. சட்டசபையும் கலைக்கப்பட்டு, ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டது.
 
ஜானகி அம்மாள் 24 நாட்கள் மட்டுமே பதவியிலிருந்தார். தமிழ்நாட்டில் மிகக்குறுகிய காலம் பதவியிலிருந்தது அவருடைய மந்திரிசபைதான். சட்டசபை கலைக்கப்பட்டதை ஆதரித்து நெடுஞ்செழியனும், ஜெயலலிதாவும் அறிக்கை விடுத்தனர்.