நீ மேலே உயரும்போது நீ யார் என்று உன் நண்பர்கள் அறிந்து கொள்வார்கள் நீ கீழே போகும்போதுதான் உண்மையான நண்பர்கள் யார் என்று நீ அறிந்து கொள்வாய்...

4.08.2012

மாலத்தீவில் திடீர் புரட்சி: இந்திய ராணுவம் அடக்கியது

மாலத்தீவில் திடீர் புரட்சி: இந்திய ராணுவம் அடக்கியது

 
இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு அருகே உள்ள குட்டி நாடு மாலத்தீவு. 1,196 சிறிய தீவுகளைக் கொண்ட இந்த நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மையான அளவில் வசிக்கிறார்கள். மொத்த மக்கள் தொகை சில லட்சமே. 1887 ம் ஆண்டு முதல் இங்கிலாந்து நாட்டு ஆட்சியின் கீழ் இருந்து வந்த இந்த நாடு 1965ம் ஆண்டுதான் விடுதலை அடைந்தது. 
 
இந்த மாலத்தீவு தற்போது "சார்க்" (தெற்காசிய நாடுகள் ஒத்துழைப்பு) அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஒன்றாகும்.   மாலத்தீவு ஜனாதிபதியாக மாமுன் அப்துல் கையூம் இருந்து வந்தார். 1988ம் ஆண்டு செப்டம்பரில் நடை பெற்ற தேர்தலில் அவர் 3வது முறையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
நவம்பர் 11ந்தேதி அவர் பதவி ஏற்பதாக இருந்தார். இந்த நிலையில் 3.11.1988 அன்று அந்த நாட்டில் திடீர் புரட்சி நடந்தது. அதிகாலை 4.30 மணிக்கு, ஆயுதம் தாங்கிய நூற்றுக்கணக்கான இளைஞர்கள் 2 கப்பலில் மாலத்தீவு நாட்டு தலைநகரான "மாலே"யில் வந்து இறங்கினர். அவர்கள் ஜனாதிபதி மாளிகையையும், ராணுவத் தலைமை நிலையத்தையும் மற்றும் முக்கிய கேந்திரங்களையும் தாக்கினார்கள்.
 
ஜனாதிபதி கையூம், அவரது அண்ணனும், ராணுவ மந்திரியுமான இப்ராகிம் இலியாஸ், கையூமின் மைத்துனரும், ஜனாதிபதி விவகார மந்திரியுமான அப்பாஸ் இப்ராகிம் ஆகியோரை புரட்சிக்காரர்கள் "சிறை" பிடித்து விட்டதாக முதலில் வந்த செய்திகள் தெரிவித்தன. ஆனால் ஜனாதிபதி கைïம் புரட்சியாளர்கள் நடத்திய தாக்குதலின்போது தப்பி பாதுகாப்பான இடத்தில் மறைந்து இருப்பதாக பின்னர் கூறப்பட்டது. 
 
புரட்சியை நடத்தியவர்கள் மாலத்தீவை சேர்ந்தவர்கள் அல்ல என்றும், கறுப்பு நிறம் கொண்ட அவர்கள் தமிழ், சிங்களம் உள்பட பல மொழிகள் பேசியதாகவும் கூறப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து கொழும்பு வழியாக மாலத்தீவுக்கு புறப்பட்ட சரக்கு கப்பலில்தான் இந்த ஆயுதம் தாங்கிய இளைஞர்கள் "மாலே" நகருக்கு வந்ததாக கருதப்பட்டது.
 
ரேடியோ, டெலிவிஷன் நிலையங்களை புரட்சிக்காரர்கள் கைப்பற்றிக் கொண்டனர். விமான நிலையமும் மூடப்பட்டது.   மாலே நகர வீதிகளில் தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்தது. அதில் 20 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தார்கள்.   2 ஆயிரம் பேரை பணய கைதிகளாக பிடித்து வைத்தனர்.
 
மாலத்தீவு அரசாங்கம் சரண் அடையாவிட்டால், 2 ஆயிரம் பேரையும் கொன்றுவிடுவோம் என்று மிரட்டினார்கள்.   தலைமறைவாக இருந்த ஜனாதிபதி கையூம் ரகசியமாக டெலிபோன் மூலம் இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடம் உதவி கேட்டார். அந்த சமயத்தில் பிரதமர் ராஜீவ் காந்தி பீகாரில் சுற்றுப்பயணம் செய்து கொண்டு இருந்தார்.
 
உடனே தனது சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு, ராஜீவ் காந்தி டெல்லி திரும்பி வந்து ஆலோசனை நடத்தினார்.   மாலத்தீவில் புரட்சியை அடக்கவும், ஜனாதிபதியை காப்பாற்றவும் சில போர்க்கப்பல்களையும், போர் விமானத்தையும் அனுப்ப உத்தரவிடப்பட்டது. விமானத்தில் இருந்து "பாரசூட்"டில் குதிக்க, பயிற்சி பெற்ற 1,600 வீரர்கள் புனா நகரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு அனுப்பப்பட்டார்கள்.
 
பிறகு, அங்கிருந்து போர் விமானங்களில் இரவோடு இரவாக மாலத்தீவு சென்றார்கள். தென் பிராந்திய கப்பல் படையைச் சேர்ந்த 3 போர்க்கப்பல்களும் விரைந்தன.   இந்தியப் "பாரசூட்" படையினர் இரவு 10.30 மணிக்கு மாலத்தீவில் சென்று இறங்கியதும், புரட்சிப் படையினர் அவர்களுடன் மோதாமல் படகுகளில் ஏறி தப்பிச் சென்றார்கள்.
 
போகும்போது புரட்சியாளர்கள், மாலத்தீவு போக்குவரத்து மந்திரி அகமது மஜுலியாவையும், மேலும் 25 பேரையும் பணயக் கைதியாக பிடித்துத் சென்றுவிட்டனர். புரட்சியாளர்கள் மாலத்தீவுக்கு வந்த கப்பல் சேதம் அடைந்துவிட்டதால், அவர்கள் படகுகளில் தப்பினார்கள். அவர்களை இந்திய கடற்படை விரட்டியது.   இலங்கை கடற்பகுதி அருகே இந்திய கடற்படையினர் புரட்சிக்காரர்களின் படகை சுற்றி வளைத்தார்கள்.
 
மாலத் தீவு மந்திரி மஜுலியாவும் மற்றவர்களும் மீட்கப்பட்டார்கள். புரட்சிக்காரர்கள் சிறை பிடிக்கப்பட்டு மாலத்தீவு அரசிடம் ஒப்படைக்கப்பட்டனர்.   ஜனாதிபதி கையூம் பதுங்கி இருந்த இடத்துக்கு இந்திய ராணுவம் சென்று அவரைக் காப்பாற்றியது. 4 மணி நேரத்தில் இந்திய ராணுவம் மாலத்தீவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
 
புரட்சிக்காரர்கள் தோல்வி அடைந்து ஓடியதைத் தொடர்ந்து, மாலே நகரில் அமைதி நிலவியது. கடைகள் திறக்கப்பட்டன. ஒரு நாள் முழுவதும் வீடுகளில் பதுங்கி இருந்த மக்கள் தைரியமாக சாலைகளில் நடமாடத் தொடங்கினர். ராணுவ தலைமை நிலைய சுவர்களில் துப்பாக்கி குண்டு பாய்ந்த அடையாளம் தவிர புரட்சி நடந்ததற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
 
ராணுவ தலைமை நிலையம் மட்டும் படுசேதம் அடைந்தது. ஜனாதிபதி மாளிகைக்கு சேதம் எதுவும் இல்லை. புரட்சியை அடக்கிய நடவடிக்கையின்போது இந்திய ராணுவ தரப்பில் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை. இந்திய வீரர் ஒருவர் கூட காயம் அடையவில்லை.   மாலத்தீவு ஜனாதிபதி கையூம் டெலிபோன் மூலம் ராஜீவ் காந்தியுடன் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார்.
 
கையூம் அந்நாட்டு மக்களுக்கு ரேடியோவில் உரை நிகழ்த்தியபோதும் பிரதமர் ராஜீவ்காந்திக்கு நன்றி தெரிவித்தார். புரட்சி அடங்கியதும் இந்திய வீரர்கள் விமானம் மூலம் திரும்பினார்கள். வெளிநாட்டில் தங்கி இருக்கும் 3 தொழில் அதிபர்களே கூலிப்படையை அமைத்து புரட்சி நடத்தினார்கள் என்று மாலத்தீவு அரசு கூறியது.
 
மாலத்தீவில் ஏற்கனவே 1980, 1983ம் ஆண்டுகளில் 2 முறை புரட்சி மூண்டு, அது முறியடிக்கப்பட்டது. 1988ல் நடந்த 3வது புரட்சியும் ஒரே நாளில் முறியடிக்கப்பட்டு விட்டது.