நீ மேலே உயரும்போது நீ யார் என்று உன் நண்பர்கள் அறிந்து கொள்வார்கள் நீ கீழே போகும்போதுதான் உண்மையான நண்பர்கள் யார் என்று நீ அறிந்து கொள்வாய்...

4.08.2012

உலகின் முதல் பெண் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயகா

உலகின் முதல் பெண் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயகா

இலங்கையில் பிரதமராக பதவி வகித்து வந்த பண்டாரநாயகா 1959ம் ஆண்டு செப்டம்பர் மாத கடைசியில் புத்த சாமியார் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் தற்காலிக பிரதமராக தனநாயகா பொறுப்பு ஏற்றார். 1960 மார்ச் மாதம் இலங்கை பாராளுமன்றத்துக்கு பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 151 இடங்களில் 50 இடங்களில் வெற்றி பெற்ற ஐக்கிய தேசிய கட்சி மந்திரிசபை அமைத்தது. சேனநாயகா பிரதமர் ஆனார். ஆனால் அடுத்த மாதமே சேனநாயகாவின் மந்திரிசபை கவிழ்ந்தது.   இதனால் மீண்டும் பொதுத்தேர்தல் நடந்தது.
இந்த தேர்தலில் சேனநாயகா தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியும், மறைந்த பண்டாரநாயகாவின் இலங்கை சுதந்திரா கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இலங்கை சுதந்திரா கட்சிக்கு பண்டாரநாயகாவின் மனைவி ஸ்ரீமாவோ பண்டாரநாயகா தலைவராக இருந்தார். ஸ்ரீமாவோவுடன் சமசமாஜ கட்சி, கம்யூனிஸ்டு கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து இருந்தன.
மொத்தம் 14 கட்சிகள் களத்தில் நின்றன. தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் (யாழ்ப்பாணம் மட்டக்களப்பு) தமிழர் தலைவர் செல்வநாயகம் தலைமையிலான தமிழரசு கட்சி போட்டியிட்டது. ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்றால் சேனநாயகா மீண்டும் பிரதமர் ஆவார் என்றும், சுதந்திரா கட்சி வெற்றி பெற்றால் ஸ்ரீமாவோ பிரதமர் ஆவார் என்றும் பிரகடனம் செய்து தேர்தல் பிரசாரம் நடந்தது. 
இந்த தேர்தலில் ஸ்ரீமாவோ பண்டாரநாயகா தலைமையிலான சுதந்திரா கட்சி (பண்டார நாயகா தொடங்கிய கட்சி) அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
மொத்த இடங்கள் - 151
சுதந்திரா கட்சி - 75
ஐக்கிய தேசிய கட்சி - 30
தமிழர் கட்சி - 16
சமசமாஜ கட்சி - 12
கம்யூனிஸ்டு - 4
மற்ற கட்சிகள் - 8
சுயேச்சைகள் - 6
தமிழர் கட்சி 21 இடங்களில் போட்டியிட்டு 16 இடங்களில் வென்றது.
காங்கேசன்துறை தொகுதியில் செல்வநாயகம் வெற்றி பெற்றார். ஐக்கிய தேசிய கட்சி படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து பிரதமராக இருந்த சேனநாயகா பதவியை ராஜினாமா செய்தார். பண்டாரநாயகாவின் சுதந்திரா கட்சி அவரது மறைவுக்கு பிறகு 10 மாதங்களில் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டது. 
ஓட்டு எண்ணிக்கை நடை பெற்றபோது ஸ்ரீமாவோ தனது சொந்த ஊரில் இருந்தார். தேர்தல் முடிவுகள் வெளியானதும் அவர் கொழும்பு நகருக்கு வந்தார். கொழும்பு நகரில் அவருக்கு கட்சி பிரமுகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பிறகு பண்டாரநாயகா கொல்லப்பட்ட வீட்டுக்குப்போய் விளக்கு ஏற்றினார். பண்டார நாயகாவின் படம் முன்பு மண்டியிட்டு வணங்கினார்.
பின்னர் கவர்னர் ஜெனரலை சந்தித்து மந்திரிசபை அமைக்க விருப்பம் தெரிவித்தார். இதனை கவர்னர் ஜெனரல் ஏற்றுக்கொண்டார். இதனை அடுத்து அன்றைய தினம் பிற்பகலில் ஸ்ரீமாவோ பிரதமராக பதவி ஏற்றார். உலகில் பிரதமராக பதவி ஏற்ற முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.   பின்னர் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயகா நிருபர்களிடம் கூறுகையில்,
"இலங்கையில் வாழும் 10 லட்சம் தமிழர்களுக்கு உரிமை அளிக்கும் பிரச்சினையில் முதலில் முடிவு காண்பேன். ராணுவ கூட்டு எதிலும் சேராமல் நடுநிலைமையுடன் இருப்போம்" என்று உறுதி அளித்தார்.
ஸ்ரீமாவோ பிரதமராக பதவி ஏற்றபோது அவருக்கு வயது 49. 1916 ம் ஆண்டு ஏப்ரல் 17 ந்தேதி பிறந்தார். இசையில் விருப்பம் உள்ளவர். `டென்னிஸ்' விளையாடுவார். 1940 ல் பண்டாரநாயகாவை திருமணம் செய்து கொண்டார். சமூக சேவையில் ஈடுபட்டார். இலங்கை பெண்கள் காங்கிரஸ் புத்த பெண்கள் சங்கம், சிங்களர் கலைக்கழகம் ஆகியவற்றின் தலைவியாக இருந்தார். 1951 ல் சுதந்திரக் கட்சியை பண்டாரநாயகா ஆரம்பித்தார்.
அது முதல் கணவனுக்கு ஆதரவாக ஒவ்வொரு தேர்தலிலும் பிரசாரம் செய்தார். சுனேத்ரா, சந்திரிகா  என்ற இரண்டு மகள்களும், அனுரா என்ற மகனும் இருந்தார்கள். இந்த தேர்தலில் ஸ்ரீமாவோ போட்டியிடவில்லை. எனவே இடைத்தேர்தலில் நின்று வெற்றி பெறுவேன் என்று ஸ்ரீமாவோ கூறினார்.  
ஸ்ரீமாவோ பிரதமர் பதவி ஏற்ற பிறகு திருமதி பண்டாரநாயகா என்றே அழைக்கப்பட்டார். திருமதி பண்டாரநாயகாவுக்கு பிரதமர் நேரு வாழ்த்து செய்தி அனுப்பினார். அதில், "என் வாழ்த்துக்களையும், நல்லெண்ணத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாடுகளுக்கு இடையே நல்லுறவு வளரவேண்டும்" என்று கூறியிருந்தார்.
 ஸ்ரீமாவோ பண்டாரநாயகா மந்திரிசபையில் மொத்தம் 11 பேர் இருந்தார்கள். கணவர் பண்டார நாயகா மந்திரிசபையில் இருந்த 5 பேருக்கு மீண்டும் மந்திரி பதவி கொடுத்தார். டையாஸ் பண்டாரநாயகா (சுட்டுக் கொல்லப்பட்ட பண்டாரநாயகாவின் ஒன்றுவிட்ட சகோதரர்) பெர்ணாடோ, டிசில்வா ஆகியோர் முக்கிய மந்திரிகள் ஆவர்.