நீ மேலே உயரும்போது நீ யார் என்று உன் நண்பர்கள் அறிந்து கொள்வார்கள் நீ கீழே போகும்போதுதான் உண்மையான நண்பர்கள் யார் என்று நீ அறிந்து கொள்வாய்...

4.08.2012

இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு கடல் நீச்சல்: மிகிர்சென் சாதனை- பாக் ஜலசந்தியை நீந்திக் கடந்தார்

இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு கடல் நீச்சல்: மிகிர்சென் சாதனை- பாக் ஜலசந்தியை நீந்திக் கடந்தார்

இலங்கையில் உள்ள தலைமன்னாரில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள தனுஷ்கோடிக்கு கடலில் நீந்தினார், "நீச்சல் வீரர்" மிகிர்சென். இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே பாக் ஜலசந்தி இருக்கிறது. இடைப்பட்ட தூரம் 22 மைல்கள்.   இந்த பாக் ஜலசந்தியை இலங்கையில் இருக்கும் தலைமன்னாரில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள தனுஷ்கோடிக்கு கடலில் நீந்தி கடக்கப்போவதாக நீச்சல் வீரர் மிகிர்சென் அறிவித்தார்.
இதற்காக அவர் 4.4.1966 அன்று `சுகன்யா' என்ற கப்பல் மூலம் தலைமன்னாருக்கு சென்றார். அவருடன் மனைவி பெல்லா, நண்பர்கள், உறவினர்கள் மற்றும் இந்திய, வெளிநாட்டு நிருபர்கள் உள்பட 100 பேர் சென்றனர். தலைமன்னார் போய் சேர்ந்ததும் மிகிர்சென் ஓய்வு எடுத்தார். `ஆர்லிக்ஸ்', `ஓவல்' போன்ற திரவ உணவை மட்டுமே சாப்பிட்டார்.
அன்று மாலையில் நீச்சல் தொடங்க வேண்டிய இடத்துக்குச் சென்று பார்வையிட்டார். மிகிர்சென் கடல் நீச்சலை தொடங்குவதற்கு முன் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:-
"நான் ஈடுபடும் முயற்சியில் உள்ள ஆபத்துகளை நான் நன்கு உணர்ந்து இருக்கிறேன். சுறா மீன்கள், விஷ பாம்புகள் மற்றும் பலவித கடல் ஜந்துக்களால் எனக்கு ஆபத்து நேரிடலாம். சுறா மீன்களால் எனக்கு ஆபத்து நேர்ந்தால்  ஒரு வேளை என் உயிருக்கே ஆபத்து நேர்ந்தால், அதற்கு நான்தான் பொறுப்பு. வேறு யாரும் பொறுப்பாளி அல்ல."
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.  
மறுநாள் (5ந்தேதி) அதிகாலை 5.35 மணிக்கு மிகிர்சென் தலைமன்னாரில் கடலில் இறங்கி நீந்தத் தொடங்கினார். ஆயிரக்கணக்கானவர்கள் கடற்கரையில் திரண்டு நின்று கைதட்டி அவரை உற்சாகப்படுத்தினார்கள். விஷப்பாம்புகள், சுறா மீன்கள் போன்றவை வந்தால் அவற்றிடம் இருந்து தப்புவதற்காக மிகிர்சென் தற்காப்புக்காக கையில் ஒரு பிச்சுவா கத்தி வைத்து இருந்தார்.
மிகிர்சென்னுக்கு முன்னால் அவருடைய மனைவி பெல்லா (வெள்ளைக்காரப்பெண்) ஒரு மோட்டார் படகில் சென்றார். டாக்டர்களும், அதிகாரிகளும் அடங்கிய மற்றும் 6 படகுகள் முன்னால் சென்றன. மிகிர்சென்னுக்கு இரு புறமும் "சுகன்யா", "சாரதா" என்ற 2 கப்பல்கள் வந்தன. பத்திரிகை நிருபர்கள் தனியாக ஒரு படகில் வந்தார்கள்.
அன்று பவுர்ணமி தினம் என்பதால் கடலில் வழக்கத்தைவிட கொந்தளிப்பு அதிகமாக இருந்தது. மிகிர்சென் எதிர்நீச்சல் போட்டு நீந்தினார். மிகிர்சென்னின் தம்பி கல்யாண்சென் இன்னொரு படகில் சென்றார். அவர் மிகிர்சென்னுக்கு தேவையானவற்றை வழங்கியபடி வந்தார். மிகிர்சென்னுடன் வந்தவர்கள் அவருக்கு பிடித்தமான பாடல்களைப்பாடி உற்சாகமூட்டினர்.
காலை 9 மணிக்கு 3 மைல் தூரம் நீந்தினார். கடலில் நீந்துகிறபோதும் மிகிர்சென் தனது மனைவியை அடிக்கடி பார்க்கத் தவறவில்லை. முன்னால் போகும் மனைவியை பார்த்து சிரித்துக்கொள்வார். அப்போதெல்லாம் "விடாமல் நீந்துங்கள்!" என்று கத்தி, கணவரை பெல்லா உற்சாகப்படுத்தி வந்தார்.   மிகிர்சென்னுக்கு உணவு செலுத்தும் குழாய் திடீரென்று பழுதடைந்து விட்டது.
ஆகவே தேன், குளுக்கோஸ் ஆகியவற்றை காகிதத்தில் வைத்து மிகிர்சென் வாயில் ஊற்றினார்கள். ஐஸ், தண்ணீர், எலுமிச்சம் பழம், இளநீர் ஆகியவை வேண்டும் என்று மிகிர்சென் கேட்டு வாங்கி குடித்தார். சூரியன் மறையும்போது, தமிழ்நாட்டின் கரையில் இருந்து 6 மைல் தூரத்தில் மிகிர்சென் இருந்தார். சூரியன் மறைந்து பவுர்ணமி சந்திரன் உதயம் ஆன பிறகு, கடல் கொந்தளிப்பு அதிகமாகியது.
ஆயினும், மிகிர்சென் உறுதியுடன் நீந்தினார். ராட்சத அலைகளால் அவருடைய நீச்சல் வேகம் தடைபட்டது. 3 மைல் தூரம் பின்னே தள்ளப்பட்டார். சில சமயம் பயங்கர அலையில் மிகிர்சென் அகப்பட்டு அங்கும் இங்குமாக ஊசல் ஆடினார். 7 அடி தூரம் அவர் முன்னேறினால், அலை 15 அடி பின்னே தள்ளியது.
இரவு 8.30 மணிக்கு அலையின் கடுமை அதிகமாக இருந்தது. சுறா மீன்கள் அதிகமாக காணப்பட்டன. மிகிர்சென், தன் மனைவியை நோக்கி, "பயப்படாதே பெல்லா! வெற்றியுடன் கரை சேருவேன். சிரித்துக்கொண்டே இரு!" என்று கூறினார். கணவன் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் சிரித்த பெல்லா, பிறகு கவலையால் வாடினார்.
கணவரின் உயிர் போராட்டத்தை கண்ட "பெல்லா" கோ என்று கதறி அழுதார். கூட இருந்தவர்கள் ஆறுதல் கூறினார்கள். கணவர் கடலில் இறங்கியது முதல் பெல்லா தண்ணீர் கூட குடிக்கவில்லை. இரவு 11 மணிக்கு பேய் காற்று வீசியது. இதனால் மிகிர்சென் மீண்டும் 3 மைல் தூரம் பின்னால் தள்ளப்பட்டார்.
11 மணிக்கு மேல் நீச்சல் வீரர் ஒரு அடி கூட முன்னேற முடியாமல் தவித்தார். இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 3 மணி வரை உள்ள 5 மணி நேரத்தில் அவர் நீந்திய தூரம் 1 மைல்தான். அதிகாலை 4 மணிக்கு அலைகள் அட்டகாசம் அடங்கியது. பிறகு மிகிர்சென் வேகமாக நீந்தினார்.   தனுஷ்கோடி கரை கண்ணில் தெரிந்ததும் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது.
கரையை நெருங்க நெருங்க மேள தாள இசையும், நாதசுர இசையும் கேட்டது. ராமேசுவர தேவஸ்தானத்தார், மேள தாளத்துடன் அவரை வரவேற்க கூடி இருந்தனர். மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் இருந்தார்கள். கைகளை ஆட்டியபடியே 6ந்தேதி காலை அவர் தள்ளாடியபடியே கரை ஏறினார்.
கூடி இருந்தவர்கள் மிகிர்சென் வாழ்க என்று குரல் எழுப்பினார்கள்.   கரை சேர்ந்த கணவனை நோக்கி பெல்லா ஓடிவந்தார். மனைவியை கட்டி அணைத்து மிகிர்சென் முத்தமிட்டார். கணவன் தோளில் முகம் புதைத்து, "நான் பயந்தே போய்விட்டேன்" என்று தேம்பியபடி பெல்லா கூறினார். தலைமன்னாரில் இருந்து மிகிர்சென் கூடவே சினிமா படம் எடுக்கும் சிலரும் ஒரு படகில் வந்தார்கள்.
மிகிர்சென் நீந்துவதை அவர்கள் சினிமா படம் எடுத்தார்கள்.   மிகிர்சென் 12 மணி நேரத்தில் கரையை அடைய முடியும் என்று கருதினார். ஆனால் கரையை அடைய அவருக்கு 25 மணி நேரம் 44 நிமிடம் பிடித்தது. இதற்கு முன்பு 1958ம் ஆண்டில் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு நீந்திய எம்.நவரத்தினசாமி, இந்த தூரத்தை 28 மணி நேரத்தில் நீந்தினார்.
1963ல் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு நீந்திய ஆனந்தன் 42 மணி 40 நிமிடங்கள் நீந்தினார். இவர் நீந்தும்போது புயலில் அகப்பட்டு திசை தவறிபோனதால் இவ்வளவு நீண்ட நேரம் நீந்த நேர்ந்தது. தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு உள்ள தூரம் 22 மைல்தான் என்றாலும் மிகிர்சென் உண்மையில் நீந்திய தூரம் 32 மைல்கள் என்று கணக்கிடப்பட்டது.
பல தடவை அலைகள் அவரை பின்னுக்கு தள்ளியதால் 10 மைல் தூரம் அவர் கூடுதலாக நீந்த வேண்டி இருந்தது.   மிகிர்சென் ஒரு குறுந்தாடி வைத்து இருந்தார். 1958ம் ஆண்டில் இங்கிலீஷ் கால்வாயை நீந்தியது முதல், அவர் இந்த தாடியை வளர்த்து வந்தார். நீந்தத் தொடங்குவதற்கு முன், அவர் தாடியை எடுத்துவிட்டார். சவரம் செய்த தாடியை அவர் கடலில் கரைத்துவிட்டார்.
"ராமர் இலங்கைக்கு போக சமுத்திரத்தில் பாலம் அமைத்த போது சமுத்திர ராஜனுக்கு ஒரு பொருளை காணிக்கையாக அளித்தார். அதுபோல நானும் இதை (தாடியை) சமுத்திர ராஜனுக்கு காணிக்கையாக அளிக்கிறேன்" என்று மிகிர்சென் கூறினார்.   மிகிர்சென் வெற்றிகரமாக கடலை நீந்திக் கடந்த செய்தி கேட்டு பிரதமர் இந்திரா காந்தி மகிழ்ச்சி அடைந்தார். நீச்சல் வீரருக்கு அவர் ஒரு பாராட்டு செய்தி அனுப்பினார்.
அதில் அவர் கூறியதாவது:_ "பெருமை தேடித்தரும் உங்களுடைய வீரச்செயலை பாராட்டுகிறேன். கடலை நீந்திக் கடந்தது பெரிய சாதனை. "வீரச்செயல்களை புரியவேண்டும் என்ற மனப்பான்மை இந்திய வாலிபர்களிடம் வளர்ந்து வருகிறது. அத்தகைய மனப்பான்மையை வளர்க்கும் வகையில் உங்கள் வீரச்செயல் அமைந்துள்ளது."
இவ்வாறு இந்திரா காந்தி கூறினார்.  
மிகிர்சென் வீரச்செயலை பாராட்டி மண்டபத்தில் அவருக்கு பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டது. கடல் ஆராய்ச்சி சங்க சார்பில் இந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. அதில் மிகிர்சென்னுக்கு ஒரு வெள்ளிக்கோப்பை பரிசளிக்கப்பட்டது. அந்தக் கோப்பையில் "அனுமார்" படம் பதிக்கப்பட்டு இருந்தது. மிகிர்சென்னின் வீரச் செயலை பாராட்டி பலர் பேசினார்கள். ராமேசுவரம் கோவிலுக்கு மிகிர்சென் மனைவியுடன் சென்றார்.
அங்கு அவருக்கு பூரண கும்ப வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் சென்னைக்கு வந்து, கல்கத்தாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.   நீச்சல் வீரர் மிகிர்சென், மேற்கு வங்காளத்தில் உள்ள புருலியா என்ற இடத்தில் 1930ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ந்தேதி பிறந்தார். அவருடைய தகப்பனார் ரமேஷ் சந்திராசென், டாக்டராவார்.
மிகிர்சென்தான் மூத்த மகன். இவருக்கு 3 தம்பிகளும், 2 தங்கைகளும் இருக்கிறார்கள். மேற்கு வங்காளத்தில் பிறந்தாலும் அவர் ஒரிசா மாநிலத்தில்தான் படித்து வளர்ந்தார். ஒரிசாவில் உள்ள உத்தல் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றார். பிறகு 1951ம் ஆண்டில் வக்கீல் பட்டம் பெற்றார். இங்கிலாந்து நாட்டுக்கும், பிரான்சு நாட்டுக்கும் இடையே உள்ள இங்கிலீஷ் கால்வாயை கடக்க 1953ம் ஆண்டில் இருந்து பல முறை முயற்சி செய்து தோல்வி அடைந்தார்.
தனது 4வது முயற்சியில் அவர் வெற்றி பெற்றார். அவர் முயற்சி வெற்றி பெற்ற நாள்: 1958ம் ஆண்டு செப்டம்பர் 27ந்தேதி.   இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டன் நகரில் உள்ள ஒரு சங்கத்தில் (கிளப்) மிகிர்சென் உறுப்பினராக இருந்தார். அந்த கிளப்புக்கு "பெல்லா" என்ற வெள்ளைக்காரப்பெண் வருவது வழக்கம். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. 1955ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 குழந்தைகள்.