நீ மேலே உயரும்போது நீ யார் என்று உன் நண்பர்கள் அறிந்து கொள்வார்கள் நீ கீழே போகும்போதுதான் உண்மையான நண்பர்கள் யார் என்று நீ அறிந்து கொள்வாய்...

4.08.2012

இலங்கை போராளிகள் இயக்க தலைவர் பத்மநாபா உள்பட 15 பேர் சுட்டுக்கொலை

இலங்கை போராளிகள் இயக்க தலைவர் பத்மநாபா உள்பட 15 பேர் சுட்டுக்கொலை

இலங்கையில் தமிழ் ஈழ விடுதலைக்காக போராடிய இயக்கங்களில் "ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி" (ஈ.பி.ஆர். எல்.எப்.) என்ற போராளிகள் இயக்கம் ஒன்று. இந்த அமைப்பின் பொதுச்செயலாளராக பத்மநாபா இருந்து வந்தார்.   இலங்கையில் வடகிழக்கு பகுதியில் அமைக்கப்பட்ட தமிழ் மாநிலத்தில் ஆளும் கட்சியாக ஈ.பி.ஆர்.எல்.எப். இருந்து வந்தது. அந்த இயக்கத்தைச் சேர்ந்த வரதராஜபெருமாள் முதல் அமைச்சரானார்.
பத்மநாபா போராளி இயக்கப் பணிகளை கவனித்து வந்தார்.   பத்மநாபாவின் "ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், சென்னை கோடம்பாக்கம் ஜக்ரியா காலனியில் ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தில் வசித்து வந்தனர். இலங்கையில் இருந்து அமைதிப்படை வாபஸ் ஆனதும், ஈ.பி.ஆர். எல்.எப். இயக்கத்தின் தலைவர்கள் இலங்கையை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு சென்றனர்.
பத்மநாபாவும், அவருக்கு நெருக்கமானவர்களும் இந்தியாவுக்கு வந்து தங்கி இருந்தனர். இந்த நிலையில் பத்மநாபா டெல்லி சென்றுவிட்டு, சென்னைக்கு திரும்பினார். கோடம்பாக்கம் ஜக்ரியா காலனியில் உள்ள வீட்டில் தங்கினார். தாக்குதல் 19.61990 அன்று இரவு 7 மணி அளவில் ஜக்ரியா காலனிக்கு 2 அம்பாசிடர் கார்களில் 6 பேர் வந்தனர்.
அவர்கள் நவீன ரக துப்பாக்கிகளுடன் காரில் இருந்து இறங்கி, 2 வது மாடியில் பத்மநாபா தங்கி இருந்த வீட்டுக்கு சென்றனர். அப்போது பத்மனாபாவுடன், இலங்கை தமிழ் மாநில நிதி மந்திரியாக இருந்த கிருபாகரன் உள்பட பலர் பேசிக்கொண்டிருந்தனர். மூடப்பட்டிருந்த கதவை மர்ம மனிதர்கள் தட்டினார்கள்.
கதவு திறக்கப்பட்டதும் அவர்களை நோக்கி மர்ம மனிதர்கள் இயந்திர துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். வெடிகுண்டுகளையும் வீசினார்கள். இந்த சத்தத்தைக் கேட்டு, ஈ.பி.ஆர்.எல்.எப். அலுவலகத்தில் இருந்த போராளிகள் மாடிக்கு ஓடி வந்தனர். அவர்கள் மீதும் மர்ம மனிதர்கள் சரமாரியாக சுட்டனர். 10 நிமிட நேரத்தில் இந்த தாக்குதலை நடத்தி விட்டு அவர்கள் காரில் தப்பி ஓடி விட்டனர்.  
இந்த தாக்குதலில் பத்மநாபா உள்பட 13 பேர் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் உயிரிழந்தார்கள். மேலும் 2 பேர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இறந்தார்கள். இதனால் சாவு எண்ணிக்கை 15 ஆனது. சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் 13 பேர் போராளிகள். 2 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
1. பத்மநாபா (வயது 40)  ஈ.பி.ஆர். எல்.எப். தலைவர், யாழ்ப்பாணம்.
2. கிருபாகரன் (36)  இலங்கை தமிழ் மாநில நிதி அமைச்சர். காரைத்தீவு, மட்டக்களப்பு.
3. யோகசங்கரி (38)  பாராளுமன்ற உறுப்பினர், யாழ்ப்பாணம்.
4. கமலன் (25)  அலுவலக பொறுப் பாளர், மருதமுனை, மட்டக்களப்பு.
5. ரவி (29)  மாகாண சபை உறுப்பினர், மட்டக்களப்பு.
6. அன்பு முகுந்தன் (28) மாகாணசபை உறுப்பினர், அன்புவழிபுரம், திரி கோணமலை.
7. கோமளராஜா (39)  மாகாணசபை உறுப்பினர், சூரியாலேன், மட்டக் களப்பு.
8. லிங்கன் (27)  மெய்க்காப்பாளர், தம்பலகாமம், திருகோணமலை.
9. புவிநாதன் (19)  ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர், 10ம் வட்டாரம், திரி கோணமலை.
10. ஜெசிந்தா (28)  ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர், காரைத்தீவு, மட்டக்களப்பு.
11. கவிதா (24)  ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர், சேனைகுடியிருப்பு, கல்முனை, மட்டக்களப்பு.
12. தருமன் (25)  ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர், காரைத்தீவு, மட்டக்களப்பு.
13. ரமேஷ் (32)  ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்.
14. ரமேஷ், சென்னையைச் சேர்ந்த வட்டிக்கடை அதிபர்.
15. நீலகண்டன் (22)  சென்னை வேளச்சேரி. டூரிஸ்ட் கார் டிரைவர்.
இவர் பத்மநாபாவுக்கு வாடகை கார் ஓட்டினார். பத்மநாபா தங்கி இருந்த மாடியில் இவரும் நின்று கொண்டிருந்தார். தாக்குதலில் குண்டு பாய்ந்து நீலகண்டனும் உயிர் இழந்தார். மேலும் 20 பேர் காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.   தாக்குதலில் ஈடுபட்டவர்கள் "டி 56" ரக நவீன துப்பாக்கியை பயன்படுத்தினார்கள். சம்பவம் நடந்த பகுதி முழுவதும் போர்க் களம் போல காட்சி அளித்தது.
பத்மநாபா தங்கி இருந்த அறையில் அவரையும் சேர்த்து 7 பேர்களின் உடல்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்தன. மற்ற உடல்கள் மெயின் ரோட்டில் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. 400 துப்பாக்கி குண்டுகளும், வெடிகுண்டுகளும் கிடந்தன.   இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தபோது முதல் அமைச்சர் கருணாநிதி டெல்லியில் இருந்தார்.
முதல் அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றிருந்த கருணாநிதிக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. டெல்லியில் இருந்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது:-
"எந்த சகோதர யுத்தம் தமிழ் ஈழத்தில் நடைபெற கூடாது என கடந்த ஆண்டு சுமார் 70 நாட்கள் போராளி குழுக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினேனோ அந்த சகோதர யுத்தத்தை தமிழ்நாட்டிலேயே அவர்கள் நடத்தி சென்னை நகரில் ரத்த ஆறு பெருக்கெடுக்க செய்து விட்டார்கள். கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
எந்த இயக்கத்தை சேர்ந்த போராளியாக இருப்பினும் அவர்கள் தமிழ்நாட்டில் உலவிக் கொண்டு இருந்தால் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொள்கிற நிலை, இதனை ஒட்டி உருவாகும் என்பதால் முன் எச்சரிக்கையாக அவர்களை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கு மாறு காவல் துறைக்கு ஆணையிடப்பட்டுள்ளது."
இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியிருந்தார்.  
இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் போராளிகளை போலீசார் தீவிரமாக தேடி கைது செய்தனர். மொத்தம் 396 பேர் பிடிபட்டார்கள். பின்னர் அவர்களில் பெண்களும், குழந்தைகளும் விடுதலை செய்யப்பட்டனர். மீதி இருந்த 181 போராளிகள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.   பத்மநாபாவை சுட்டுக்கொன்ற விடுதலைப்புலிகள் வெள்ளை நிற அம்பாசிடர் காரில் தப்பியதாக கருதப்பட்டது.
இதுபற்றி தமிழ்நாடு முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டன. போராளிகள் வரும் காரை மடக்கி பிடிக்க உத்தரவிடப்பட்டது. சம்பவம் நடந்த 1 மணி நேரத்தில் அதாவது இரவு 8.45 மணி அளவில், தாம்பரத்தை அடுத்த கேளம்பாக்கம் (செங்கல்பட்டு மாவட்டம்) வேகமாக வந்த வெள்ளை நிற அம்பாசிடர் கார் ஒன்றை போலீசார் நிறுத்தி சோதனை போட்டனர்.
சிட்டிபாபு என்ற போலீஸ்காரர் காருக்குள் எட்டிப்பார்த்தார். அப்போது காரில் 4 பேர் துப்பாக்கியுடன் இருந்தனர். காரை மெதுவாக நகர்த்தி போலீஸ்காரர் சிட்டிபாபுவை தாக்கி கீழே தள்ளிவிட்டு காரை வேகமாக ஓட்டிச்சென்று தப்பிவிட்டனர்.   தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சின்னமனை கிராமத்தில் ஒரு வெள்ளை நிற மாருதி வேன் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சுப்பையா பிள்ளை என்பவரின் தோட்டத்தில் வைக்கோலால் மூடி மறைக்கப்பட்ட நிலையில் வெள்ளை நிற மாருதி வேன் நின்று கொண்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். "ஏர் கண்டிஷன்" வசதி செய்யப்பட்டிருந்த அந்த வேனை போலீசார் கைப்பற்றினார்கள். சுப்பையா பிள்ளையிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அதிகாலையில் அந்த காரில் இயந்திர துப்பாக்கி களுடன் 6 பேர் வந்ததாகவும், பகல் 2 மணி வரை தோட்டத்தில் தங்கி இருந்துவிட்டு, இலங்கையில் இருந்து7 பேருடன் வந்த விசைப்படகு ஒன்றில் தப்பி சென்றனர் என்றும் தெரியவந்தது.
எனவே சென்னையில் நடந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அவர்களாகவே இருக்கும் என்று கூறப்பட்டது.   டெல்லிக்கு சென்றிருந்த கருணாநிதி விமானம் மூலம் 20 ந்தேதி பிற்பகல் 3.40 மணிக்கு சென்னைக்கு திரும்பினார். விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு நேராக ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு வந்தார். துப்பாக்கி சூட்டில் பலியான ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்ம நாபா, இலங்கை வடகிழக்கு மாநில கவுன்சில் மந்திரி கிருபாகரன் முதலியவர்களின் உடல்கள் அங்கு வைக்கப்பட்டு இருந்தன.
அந்த உடல்கள் மீது கருணாநிதி மலர் மாலைகள் வைத்து அஞ்சலி செலுத்தினார். துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களையும் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர், கருணாநிதி கூறும்போது, "இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் வழங்கப்படும். காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் உதவிப்பணம் வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.
பத்மநாபா உள்பட 13 போராளிகளின் உடல்களும், 22 ந்தேதி காலை பெரிய ஆஸ்பத்திரியில் இருந்து வேன் மூலம் சென்னை அரசினர் தோட்டத்துக்கு கொண்டு வரப்பட்டன. ராஜாஜி மண்டபத்துக்கு அருகே உள்ள பழைய கவர்னர் மாளிகை முகப்பில் 13 பேரின் உடல்களும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்தன.
பத்மநாபாவின் மனைவி ஆனந்தி போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். கதறி அழுதபடியே சென்று கணவரின் காலைத்தொட்டு வணங்கினார்.   சுட்டுக் கொல்லப்பட்டபோது பத்மநாபாவுக்கு வயது 40. என்ஜினீயரிங் பட்டதாரியான அவர் முதலில் ஈழம் போராளிகள் அமைப்பான "ஈராஸ்" இயக்கத்தில் சேர்ந்தார்.
பின்னர் அந்த இயக்கத்தில் இருந்து பிரிந்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை தொடங்கினார். இலங்கை தமிழ் பகுதியில் இனக்கலவரம் ஏற்பட்டபோது போராளிகள் குழு தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்தன. பத்மநாபாவும் சென்னை வந்தார். பிறகு அவர் இலங்கை திரும்பவில்லை. அப்போது சென்னையில் கல்லூரி மாணவியாக இருந்த ஆனந்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
1989ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ந்தேதி இவர்கள் திருமணம் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்தது. பத்மநாபா கொல்லப்பட்ட போது ஆனந்தி வீட்டில் இல்லை. கடைக்குச் சென்றிருந்தார். இதனால் ஆனந்தி உயிர் தப்பினார்.