நீ மேலே உயரும்போது நீ யார் என்று உன் நண்பர்கள் அறிந்து கொள்வார்கள் நீ கீழே போகும்போதுதான் உண்மையான நண்பர்கள் யார் என்று நீ அறிந்து கொள்வாய்...

4.08.2012

அன்னை தெரசா வரலாறு

அன்னை தெரசா வரலாறு
  யூகோஸ்லாவியா நாட்டில் ஸ்கோப்ஜி என்ற சிறு கிராமத்தில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர் தெரசா. பிறந்தது 1910-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27-ஆம் நாள். இளம்வயதிலேயே தந்தையை இழந்தவர். தாயால் வளர்க்கப்பட்டவர். 1929-ல் இந்தியாவிற்கு வந்தார். லோரட்டோ மடத்தின் கொல்கல்கத்தா கிளையில் இருந்து கொண்டு பள்ளிக்கூடமொன்றில் ஆசிரியையாகப் பணியாற்றினார்.
 
அன்னை வசதியற்ற வீட்டுப் பிள்ளைகளுக்குத்தாமே கல்வி கற்பித்திருக்கிறார். ஆதரவற்ற முதியோர்களுக்கு அடைக்கலம் தந்திருக்கிறார். நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் இருந்தவர்களைத் தத்தெடுத்து அவர்கள் நிம்மதியாய் மரணத்தை ஏற்கச் செய்வதற்காக `நிர்மல் இதயம்' என்ற ஆசிரமத்தை ஏற்படுத்தினார். அன்னை அறிவார் மனிதனின் முதல் தேவை அன்புதான் என்பதை.
 
அதனால்தான் அவர் தொழு நோயாளிகளுக்கும், எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் சேவையை விரிவுபடுத்தினார். தொழு நோயாளிகளுக்கு என்று `ப்ரேம் நிவாஸ்' இல்லம் தொடங்கினார். அன்னையின் தொண்டு இந்தியாவோடு நின்றுவிடவில்லை. ஆஸ்திரேலியா, வெனிசுலா, கொலம்பியா, ரோம், பொலிவியா, ஜோர்டான், ஏமன் ஆகிய நாடுகளிலும் கிளை விரித்திருக்கிறது.
 
தமது வாழ்வின் ஒவ்வொரு நாளையும் மற்றவர்களின் நலனுக்காகவே செலவிட்ட அன்னை 1997-ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாள் மரணமடைந்தார். 1962-ல் பத்மஸ்ரீ விருது, 1962-ல் பிலிப்பைன்ஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதான `ராமோன் மக்ஸேஸே' விருது, 1971-ல் போப் ஆண்டவரின் உலக சமாதானப் பரிசு, அமெரிக்காவின் `நல்ல சாமரித்தான்' விருது, 1972-ல் சர்வதேச நேரு சமாதானப் பரிசு, 1976-ல் சாந்தி நிகேதனில் டாக்டர் பட்டம் இவை அன்னை பெற்ற விருதுகளில் குறிப்பிடத்தக்கவை.
 
இந்திய அரசு அவருடைய நினைவாய் தபால் தலை வெளியிட்டிருக்கிறது. 1980-ல் `பாரத ரத்னா' விருது வழங்கிக் கவுரவித்தது. அன்னை தெரசாவின் பணியைப் போற்றும் விதமாய் உலக அமைதிக்கான நோபல் பரிசு (1979) வழங்கப்பட்டது. வாட்டிகன் நகரம் `புனிதர்' பட்டத்தை சமீபத்தில் வழங்கியது அவருக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவம்.