நீ மேலே உயரும்போது நீ யார் என்று உன் நண்பர்கள் அறிந்து கொள்வார்கள் நீ கீழே போகும்போதுதான் உண்மையான நண்பர்கள் யார் என்று நீ அறிந்து கொள்வாய்...

4.08.2012

உலகப் போரினால் இரண்டாகப் பிரிக்கப்பட்ட ஜெர்மனி ஒரே நாடாக இணைப்பு

உலகப் போரினால் இரண்டாகப் பிரிக்கப்பட்ட ஜெர்மனி ஒரே நாடாக இணைப்பு
  இரண்டாவது உலகப் போரைத் தொடர்ந்து, கிழக்கு ஜெர்மனி என்றும், மேற்கு ஜெர்மனி என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்ட ஜெர்மனி, மீண்டும் ஒன்றாக இணைந்தது. ஜெர்மனியை இரண்டாகப் பிரித்த "பெர்லின் சுவர்" இடித்துத் தள்ளப்பட்டது. 1939 முதல் 1945 வரை நடந்த இரண்டாவது உலகப் போருக்கு காரணமானவர் ஜெர்மன் நாட்டு சர்வாதிகாரி ஹிட்லர். போரில் தோல்வி அடைந்து, அவர் தற்கொலை செய்து கொண்டார்.
 
நேச நாடுகளிடம் ஜெர்மனி சரண் அடைந்தது.   ஜெர்மனியை நேச நாடுகள் பங்கு போட்டுக்கொண்டன. மேற்கு ஜெர்மனி என்றும், கிழக்கு ஜெர்மனி என்றும் இரண்டாக பிரிக்கப்பட்டது. மேற்கு ஜெர்மனியில் அமெரிக்க ஆதரவு அரசாங்கமும், கிழக்கு ஜெர்மனியில் ரஷிய ஆதரவு அரசாங்கமும் அமைக்கப்பட்டன. பெர்லின் நகரமும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
 
1950 ம் ஆண்டில், கிழக்கு ஜெர்மனியில் இருந்து ஏராளமான பேர் மேற்கு ஜெர்மனிக்கு அகதிகளாக குடியேறினார் கள். அகதிகள் போவதற்கு பெர்லின் நகரம்தான் வழியாகப் பயன்பட்டது.   எனவே, அகதிகள் போவதை தடுக்க பெர்லின் நகரில் பெரிய சுவர் ஒன்றை கிழக்கு ஜெர்மனி அரசாங்கம் அமைத்தது. அதுவே இரு நாடுகளையும் பிரிக்கும் எல்லையானது. அது "பெர்லின் சுவர்" என்று அழைக்கப்பட்டது.  
 
அமெரிக்காவின் உதவியுடன் மேற்கு பெர்லின் நகரம் புதுப்பிக்கப்பட்டது. உலகின் அழகிய நகரங்களில் ஒன்றாக அந்த நகரம் கம்பீரமாக எழுந்தது. ஆனால் கிழக்கு பெர்லின் நகரம் மிகவும் மெதுவாகவே வளர்ச்சி அடைந்தது. சுமார் 45 ஆண்டு காலம் இரு ஜெர்மனிகளும் பிரிந்தே இருந்தன.   இரண்டு நாடுகளாக பிரிக்கப்பட்டிருந்தாலும் ஜெர்மனி மக்கள் உணர்ச்சியால் ஒன்றுபட்டவர்கள்.
 
இரண்டு நாடுகளும் ஒன்றாக இணைய வேண்டும் என்று விரும்பினார்கள். அதற்கு போராட்டம் நடத்த தொடங்கினார்கள். தங்களைப் பிரிக்கும் பெர்லின் சுவர் மீது அவர்கள் வெறுப்படைந்தார்கள். அவ்வப்போது சுவரை உடைப்பதிலும், செங்கற்களை எடுத்துச் செல்வதிலும் ஈடுபட்டனர். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிச ஆட்சி கவிழ்க்கப்பட்டதால் ஜெர்மனியில் இணைப்பு கோரிக்கை வலுப்பெற்றது.
 
1989 அக்டோபர் மாதம், இணைப்பு கோரிக்கைக்காக மாபெரும் போராட்டம் நடைபெற்றது.   ரஷிய அதிபர் கார்பசேவும் இணைப்பு முயற்சிக்கு பச்சைக்கொடி காட்டினார். இதனை தொடர்ந்து இரு நாடுகளும் இணைய ஒப்புக்கொள்ளப்பட்டது. இரண்டு ஜெர்மனிகளையும் ஒன்றாக இணைப்பது என்று 1990ல் ஒப்பந்தம் ஏற்பட்டது. பிரிவினையின் அடையாளமாக காட்சி அளித்த பெர்லின் சுவரை மக்கள் இடித்துத்தள்ளினர்.  
 
ஒப்பந்தத்தின்படி 1990 அக்டோபர் 3ந்தேதி இரு ஜெர்மனிகளும் ஒரே நாடாக இணைந்தன. அக்டோபர் 2ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு தேவாலய மணிகள் முழங்க பட்டாசுகள் வெடிக்க இரு நாடுகளும் இணைந்தன. நாடு முழுவதும் இணைப்பு விழாக்கள் நடந்தபோதிலும், விஷேச விழா ஹம்பர்க் நகரில் நடந்தது. 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஜெர்மனியர்கள் வீதிகளில் பாட்டுப்பாடி, நடனமாடி இணைப்பு விழாவைக் கொண்டாடினர்.  
 
கிழக்கையும், மேற்கையும் சேர்ந்த 14 பள்ளிக்கூட மாணவர்கள் 60 சதுர மீட்டர் ஜெர்மன் தேசியக்கொடியை எடுத்து வந்தனர். 40 மீட்டர் உயரக் கம்பத்தில் கட்டப்பட்ட அந்தக் கொடியை ஜனாதிபதி வோன் பெய் சாக்கர் ஏற்றினார். அவர் பேசுகையில், நாம் ஒன்றாக இருக்க வேண்டுமானால் நாம் அனைத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
 
பிரிந்த நாடுகள் ஒன்று சேர்ந்ததால், ஜெர்மனி மக்கள் மகிழ்ச்சி. இந்த விழாவில் கலந்து கொண்ட கிழக்கு ஜெர்மனி பிரதமர் லோதர் டி.மாயிசியரே பேசுகையில், "நீண்ட காலம் எந்த மகிழ்ச்சியான சம்பவத்துக்கு காத்திருந்தோமோ அது இது தான்" என்றார்.   மோதல்கள், கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் இரு நாடுகளின் இணைப்பை உலக நாடுகள் வரவேற்றன.
 
இந்த சரித்திர சம்பவத்துக்கு ஐ.நா.சபை பொதுச்செயலாளர் ஜாவியர் பெரஸ் டி கியூல்லர், அமெரிக்க ஜனாதிபதி புஷ், ரஷிய அதிபர் கார்பசேவ் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர். இந்தியப் பிரதமர் வி.பி.சிங்கும் வாழ்த்து செய்தி அனுப்பினார். இணைப்புக்குப்பிறகு ஜெர்மன் பெடரல் குடியரசு (எப்.ஆர்.ஜி.) என அழைக்கப்படும் என்றும், பெர்லின் தலைநகராக தொடர்ந்து நீடிக்கும் என்றும், பான் நகரம் அரசுத் தலைமையகமாக கொஞ்ச காலம் நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. கிழக்கு ஜெர்மனி பிரதமர் லோதர் இணைந்த ஜெர்மனியின் துணைப் பிரதமராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.