நீ மேலே உயரும்போது நீ யார் என்று உன் நண்பர்கள் அறிந்து கொள்வார்கள் நீ கீழே போகும்போதுதான் உண்மையான நண்பர்கள் யார் என்று நீ அறிந்து கொள்வாய்...

4.08.2012

ஜெயலலிதா வாழ்க்கைப்பாதை (3)

ஜெயலலிதா வாழ்க்கைப்பாதை

 
சினிமா உலகை விட்டு விலகிய ஜெயலலிதா, 1982_ல் அ.தி.மு.க.வில் உறுப்பினராகச் சேர்ந்து, தனது அரசியல் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார். அதே ஆண்டில், கடலூரில் நடந்த மாநாட்டில் ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தி, கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளராக நியமித்தார்.
 
ஜெயலலிதாவை, 1984_ல் ராஜ்யசபா உறுப்பினராக்கி, பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தார். நாடாளுமன்ற அ.தி.மு.க. துணைத் தலைவராகவும் ஆக்கினார். ராஜ்ய சபையில் ஜெயலலிதா பேசிய பேச்சுகள், அவருக்குப் புகழ் தேடித்தந்தன. குறிப்பாக, ஆங்கிலத்தில் அவர் பெற்றிருந்த புலமை அனைவரையும் கவர்ந்தது.
 
எம்.ஜி.ஆர். உடல் நலம் இன்றி அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தபோது, தமிழக சட்டசபை தேர்தல் நடந்தது. அ.தி.மு.க.வுக்கு தேர்தல் பிரசாரம் செய்வதில் ஜெயலலிதா முக்கியப் பங்கெடுத்துக் கொண்டார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின் அ.தி.மு.க. பிளவுபட்டது. எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஜானகி அம்மாள் முதல்_அமைச்சர் ஆனபோதிலும், தொண்டர்கள் ஜெயலலிதா பக்கம் இருந்தனர்.
 
எனவே, ஜானகி அம்மாள் மந்திரிசபை 24 நாட்கள் மட்டுமே பதவியில் இருக்க முடிந்தது. அதன்பின், ஜானகி அம்மாள் அரசியலை விட்டு விலகினார். ஒன்றுபட்ட அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஜெயலலிதா பொறுப்பேற்றார். 1991 தேர்தலில் வெற்றி பெற்று முதல்_அமைச்சர் ஆனார்.