நீ மேலே உயரும்போது நீ யார் என்று உன் நண்பர்கள் அறிந்து கொள்வார்கள் நீ கீழே போகும்போதுதான் உண்மையான நண்பர்கள் யார் என்று நீ அறிந்து கொள்வாய்...

4.08.2012

ஜெயலலிதா வாழ்க்கைப்பாதை (2)

ஜெயலலிதா வாழ்க்கைப்பாதை

 
ஜெயலலிதாவின் சித்தி (தாய் சந்தியாவின் தங்கை), வித்யாவதி ஏற்கனவே சினிமாவில் நடித்து வந்தார். அடுத்து சந்தியாவும் சினிமா நட்சத்திரமானார். ஜெயலலிதாவுக்கு சினிமாவில் விருப்பமில்லை என்றாலும், குடும்ப நிலை காரணமாக திரை உலகில் புகுந்தார்.
தொடக்கத்தில் சில கன்னடப்படங்களில் நடித்தாலும், அவர் கதாநாயகியாக நடித்து 1965_ல் வெளிவந்த டைரக்டர் ஸ்ரீதரின் "வெண்ணிற ஆடை"தான் அவரது முதல் தமிழ்ப்படம். அந்தப் படத்தயாரிப்பின்போதே பி.ஆர்.பந்துலுவின் "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார். 2 படங்களும் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றன.
தொடர்ந்து பல படங்களில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார்.   "வெண்ணிற ஆடை" படம் வெளிவருவதற்கு முன், ஜனாதிபதி வி.வி.கிரியின் மகன் சங்கர் கிரி தயாரித்த "எபிசில்" (லிகிதம்) என்ற ஆங்கிலப்படத்தில் ஜெயலலிதா நடித்தார். அந்தப் படத்தைப் பார்த்தவர்கள், "இதில் ஜெயலலிதா பேசுவதுதான் இங்கிலீஷ்! மற்றவர்கள் பேசுவது பட்லர் இங்கிலீஷ்!" என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டார்கள்.
முதல் படத்திலேயே கதாநாயகியாகி, புகழ் ஏணியின் உச்சிக்கு சென்ற ஜெயலலிதா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று பல மொழிகளிலும் நடித்தார். சிவாஜிகணேசன், என்.டி.ராமராவ், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என்று முன்னணி கதாநாயகர்கள் எல்லோருடனும் நடித்தார். ஜெயலலிதாவின் தாயார் சந்தியா, 1971_ம் ஆண்டு காலமானார்.
தாயாரின் நினைவாக தேனாம்பேட்டை போயஸ் தோட்டத்தில் வீடு ஒன்றைக் கட்டிய ஜெயலலிதா, அந்த வீட்டிற்கு "வேதா நிலையம்" என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். (சந்தியாவின் இயற்பெயர் `வேதா') ஜெயலலிதாவின் 100_வது படமான "திருமாங்கல்யம்" 1977_ல் வெளிவந்தது. அதன்பின் படங்களில் நடிப்பதைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டார்.
1980_ல் வெளிவந்த "நதியைத்தேடி வந்த கடல்" என்ற சினிமாதான் அவர் நடித்து கடைசியாக வெளிவந்த படம். சுமார் 16 ஆண்டுகளில் 112 படங்களில் நடித்து முடித்தார்.