சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டன் பிரபு 1948 ஜுன் 21_ந்தேதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். அவருக்குப் பதிலாக அப்போது மேற்கு வங்காள கவர்னராக இருந்த ராஜாஜி புதிய கவர்னர் ஜெனரலாகப் பதவி ஏற்றார். இந்தியாவைக் குடியரசு நாடாகப் பிரகடனம் செய்வதற்காக இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்குவதில் இந்திய அரசு ஈடுபட்டது. அரசியல் சட்டத்தைத் தயாரிக்கும் பொறுப்பு டாக்டர் அம்பேத்காரிடம் ஒப்படைக்கப்பட்டது.
டாக்டர்
அம்பேத்கார் உருவாக்கிய அரசியல் சட்டத்தை 1949 நவம்பர் 26_ந்தேதி அரசியல்
நிர்ணய சபை அங்கீகரித்தது. அதன்படி 1950 ஜனவரி 26_ந்தேதி இந்தியா குடியரசு
நாடாகியது. இந்தியக் குடியரசின் முதல் ஜனாதிபதியாக கவர்னர் ஜெனரல் ராஜாஜி
பொறுப்பேற்க வேண்டும் என்று நேரு விரும்பினார். ஆனால் இந்தி பேசும்
மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் இதை எதிர்த்தனர். 1942_ல் நடைபெற்ற
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ராஜாஜி எதிர்த்தார். எனவே அவரை ஜனாதிபதி
ஆக்கக்கூடாது என்று அவர்கள் கூறினார்கள்.
1942_ல்
பாகிஸ்தான் பிரிவினை கோரிக்கையை ராஜாஜி ஆதரித்தார். இதைக் காங்கிரஸ்
எதிர்த்ததால் காங்கிரஸ் நடத்திய போராட்டங்களில் கலந்து கொள்ளாமல் ராஜாஜி
விலகி இருந்தார். இதன் காரணமாக ராஜேந்திர பிரசாத் இந்தியாவின் முதல்
ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார். கவர்னர் ஜெனரல் என்ற பதவி அன்றுடன்
முடிவடைந்தது.
இந்தியாவின்
கடைசி கவர்னர் ஜெனரல், அப்பதவியை வகித்த ஒரே இந்தியர் என்ற புகழுடன்
ராஜாஜி சென்னை திரும்பினார். ராஜேந்திர பிரசாத் இந்தியாவின் முதல்
ஜனாதிபதியாக 1950 ஜனவரி முதல் 12 ஆண்டு காலம் பதவியில் இருந்து ஓய்வு
பெற்றார். 1962_ல் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் ஜனாதிபதி ஆனார். இந்திய
ஜனாதிபதியாக மிக நீண்ட காலம் பதவி வகித்தவர் ராஜேந்திர பிரசாத்தான்.
இந்தியாவை தொழில் துறையில் முன்னேறச் செய்யவேண்டும், வல்லரசு நாடாக
மாற்றவேண்டும் என்பதற்காக வாழ்நாள் முழுவதும் நேரு அரும்பாடுபட்டார்.
பொருளாதாரத்
துறையில் முன்னேற்றம் காண ஐந்தாண்டு திட்டங்களை வகுத்தார். விஞ்ஞானத்
துறையிலும் இந்தியா முன்னேற வேண்டும் என்பதற்காகப் பல திட்டங்களை
வகுத்தார். அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, சீனா உள்பட அனைத்து
நாடுகளுடனும் நட்புறவு கொண்டார். சர்வதேச அளவில் இந்தியாவின் பெருமையை
உயர்த்தினார். 1952, 1957, 1962 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில்
பாராளுமன்றத்தில் மெஜாரிட்டி இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது.
நேரு தொடர்ந்து பிரதமராக பதவி வகித்தார். நேருவின் முயற்சியால் பிலாய் இரும்பாலையை வடிவமைத்து கட்டிக் கொடுக்க சோவியத் யூனியன்
முன் வந்தது. ரூர்கேலாவில் ஜெர்மனியும், துர்க்காபூரில் பிரிட்டனும்
உருக்காலைகள் அமைத்துக் கொடுத்தன. சென்னை பெரம்பூர் ரெயில் பெட்டி
தொழிற்சாலை, ராணுவ டாங்க் தொழிற்சாலை, திருச்சி பாய்லர் தொழிற்சாலை
முதலியவையும் நேரு காலத்தில் உருவானவையே.
1955_ம்
ஆண்டில் ஆவடியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சி மாநாட்டில் சோசலிச
சமுதாயத்தை அமைப்பதே நமது லட்சியம் என்ற தீர்மானத்தை உருவாக்கி நிறைவேறச்
செய்தார். நேருவின் சோசலிச அமைப்பில் தனியார் துறைக்கும் இடம் உண்டு. அரசு
ஏற்று நடத்தும் பொது துறைக்கும் இடம் உண்டு. சர்வாதிகார முறையைக் கையாண்டு
சமுதாய அமைப்பை உருவாக்கக்கூடாது.
தேர்தல்கள்
மூலம் உருவாக்கப்படும் அரசுதான் ஜனநாயக முறைப்படி சமூக அமைப்பை
மாற்றுவதற்கான வழிவகைகளைக் காணவேண்டும். இதுவே ஆவடி மாநாட்டில்
நிறைவேற்றப்பட்ட சோசலிச தீர்மானத்தின் சாராம்சம் ஆகும். உலகின் இரு
வல்லரசுகளான அமெரிக்கா பக்கமோ, சோவியத் யூனியன்
பக்கமோ சாயாமல் நடுநிலை வகிக்கும் நாடுகளை ஒன்று சேர்த்து, அணி சேரா
நாடுகள் என்ற அமைப்பை நேரு உருவாக்கினார். இதன் மூலம் உலகத் தலைவர்களில்
ஒருவராக உயர்ந்தார். எந்த ஒரு சர்வதேச பிரச்சினையானாலும் நேருவின்
கருத்துக்கு உலக நாடுகள் முக்கியத்துவம் கொடுத்தன. நேரு மந்திரி சபையில்
துணைப்பிரதமராக இருந்தவர் வல்லபாய் பட்டேல். சமஸ்தானங்களை இந்தியாவுடன்
இணைத்த இரும்பு மனிதர் அவர். காந்தி உயிரோடு இருந்தவரை, நேரு _ பட்டேல்
கருத்து வேற்றுமைகளை தீர்த்து வைத்து, நெருக்கடி ஏற்படாமல் பார்த்து
வந்தார்.
காந்தி
சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்ச்சி நடந்ததும் அப்போது உள்நாட்டு இலாகா
பொறுப்பை வகித்து வந்த பட்டேல் பதவி விலகவேண்டும் என்று பலர்
வற்புறுத்தினார்கள். ஆனால் நேரு அதை ஏற்கவில்லை. பட்டேல் மறையும் வரை
கருத்து வேற்றுமைகளைப் பொருட்படுத்தாமல் அவருக்கு மதிப்பும், மரியாதையும்
கொடுத்து வந்தார் நேரு.
ஒரு
சமயம் நேருவுக்கும் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத்துக்கும் மோதல் ஏற்பட்டது.
பிரதமரை விட ஜனாதிபதிக்குத்தான் அதிக அதிகாரம் என்றார் ராஜேந்திர பிரசாத்.
பிரிட்டனில் ராஜகுடும்பத்துக்கு எத்தகைய அதிகாரம் உள்ளதோ அதே அதிகாரம்தான்
இந்தியாவில் ஜனாதிபதிக்கு இருக்கிறது என்பதை அரசியல் சட்ட
நிபுணர்களைக்கொண்டு ராஜேந்திர பிரசாத்துக்கு நேரு உணர்த்தினார்.
நேரு
பல முறை உலகப்பயணம் மேற்கொண்டார். அமெரிக்க அதிபர் கென்னடி, எகிப்து
அதிபர் நாசர், சீன அதிபர் மா_சே_துங், இந்தோனேஷிய அதிபர் சுகர்ணோ, ரஷிய
தலைவர்கள், பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர் ஆகியோரெல்லாம் நேருவிடம் மிகுந்த
அன்பும், மரியாதையும் வைத்திருந்தனர். இந்தியாவின் முடிசூடா மன்னராக
விளங்கிய நேருவுக்கு, 1962 இறுதியில் பெரும் சோதனை ஏற்பட்டது.

