இந்தியா _
பாகிஸ்தான் பிரிவினையில் இருந்தே, "காஷ்மீர் பிரச்சினை" இருந்து வருகிறது.
அந்தப் பிரச்சினையைத் தீர்க்கப் பலமுறை முயற்சி செய்தும், வெற்றி
அடையவில்லை. காஷ்மீர் இந்தியாவின் வடக்கே ஏரிகளும், பள்ளத்தாக்குகளும்
நிறைந்த பகுதி. உலகின் அழகான பிரதேசங்களில் ஒன்று. ஆதிகாலத்தில் மவுரிய,
குஷான் வம்ச மன்னர்களின் ஆட்சியின் கீழ் காஷ்மீர் இருந்தது.
இந்தியா
சுதந்திரம் அடைந்தபோது காஷ்மீர் ஒரு சமஸ்தானமாக இருந்தது. இந்த
சமஸ்தானத்தை ஹரிசிங் என்ற இந்து மன்னர் ஆண்டு வந்தார். (இவர்,
பிற்காலத்தில் மத்திய மந்திரியாக இருந்த கரண்சிங்கின் தந்தை) மன்னர்
இந்துவாக இருந்தபோதிலும் காஷ்மீர் மக்களில் பெரும்பான்மையோர் முஸ்லிம்கள்.
அங்கு வசித்த இந்துக்கள் 8 லட்சம் பேர். முஸ்லிம்கள் எண்ணிக்கை 32 லட்சம்.
காஷ்மீர்
சுதந்திர நாடாக நீடிக்க வேண்டும் என்று காஷ்மீர் மன்னர் விரும்பினார்.
பாகிஸ்தான் இதற்கு சம்மதித்தது. இந்தியா சம்மதிக்கவில்லை. இதற்கிடையே
காஷ்மீர் மலை வாசிகளுக்கு நவீன ஆயுதங்களை பாகிஸ்தான் கொடுத்து மன்னருக்கு
எதிராகக் கலகம் செய்யும்படி தூண்டி விட்டது. அத்துடன் காஷ்மீருக்குள்
பாகிஸ்தான் ராணுவத்தினரும் ஊடுருவினர். காஷ்மீரை பாகிஸ்தான் விழுங்கிவிடும்
என்பதை உணர்ந்த மன்னர் ஹரிசிங் இந்திய கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டனுடன்
தொடர்பு கொண்டு"காஷ்மீருக்குள் புகுந்துள்ள பாகிஸ்தான் ராணுவத்தை
முறியடிக்க உடனே ராணுவத்தை அனுப்புங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.
இதுபற்றி
நேருவுடன் மவுண்ட்பேட்டன் ஆலோசனை நடத்தினார். பிறகு, "இந்தியாவுடன்
காஷ்மீரை இணைப்பதாக எழுதிக் கொடுங்கள். உடனே இந்தியப்படை காஷ்மீருக்கு
அனுப்பப்படும்" என்று மன்னருக்கு மவுண்ட்பேட்டன் தகவல் அனுப்பினார்.
1947
அக்டோபர் 26_ந்தேதி இந்தியாவுடன் காஷ்மீரை இணைப்பதற்கான ஒப்பந்தத்தில்
மன்னர் ஹரிசிங் கையெழுத்திட்டார். இணைப்புக்கு காஷ்மீர் சட்டசபையும்
ஒப்புதல் அளித்தது. மறுநாளே காஷ்மீரில் இந்தியப் படைகள் போய் இறங்கின.
காஷ்மீருக்குள் ஊடுருவி இருந்த பாகிஸ்தான் படைகள் மீது இந்திய ராணுவம்
அதிரடி தாக்குதல் நடத்தியது.
சில
பகுதிகளில் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் பின்வாங்கினர்.
காஷ்மீருக்குள் நடக்கும் போர் இந்தியா _பாகிஸ்தான் நேரடி யுத்தமாக
மாறிவிடக்கூடும் என்று ஐ.நா.சபை கவலை அடைந்தது. ஐ.நா.சபை அவசரமாக கூடி போர்
நிறுத்தம் செய்யும்படியும் அமைதியான பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத்
தீர்த்துக் கொள்ளுமாறும் இரு நாடுகளையும் கேட்டுக்கொண்டு தீர்மானம்
நிறைவேறியது. இதன் காரணமாக 1948 ஜனவரி 1_ந்தேதி, "போர் நிறுத்தம்"
அமுலுக்கு வந்தது.
ஜம்மு
_காஷ்மீரின் மொத்த பரப்பு 2,22,236 சதுர கிலோ மீட்டராகும். போர் நிறுத்தம்
அமுலுக்கு வந்தபோது, அந்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு பாகிஸ்தான்
படைகள் வசம் இருந்தது. அப்போது தொடங்கிய "காஷ்மீர் பிரச்சினை", இன்னும்
இருந்து வருவதால், அந்தப் பகுதி தொடர்ந்து பாகிஸ்தான் வசமே இருந்து
வருகிறது. அந்தப் பகுதியை "ஆசாத் காஷ்மீர்" என்று பாகிஸ்தான்
கூறிக்கொள்கிறது.
"காஷ்மீரை
இந்தியாவுடன் இணைப்பதாக மன்னர் ஹரிசிங் எழுதிக்கொடுத்து விட்டார். அதற்கு
காஷ்மீர் சட்டசபையும் ஒப்புதல் அளித்துவிட்டது. எனவே காஷ்மீர் இந்தியாவின்
ஒரு பகுதி" என்பது இந்தியாவின் நிலை. "காஷ்மீரின் எதிர்காலத்தை நிர்ணயிக்க
அங்கு பொது ஜன வாக்கெடுப்பு நடத்தவேண்டும்" என்று பாகிஸ்தான் கூறுகிறது.
காஷ்மீரில் முஸ்லிம்கள் பெரும் பான்மையாக இருப்பதால் பாகிஸ்தானுடன்
சேருவதற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்பது பாகிஸ்தானின் நம்பிக்கை.
"காஷ்மீர்
சிங்கம்" என்று அழைக்கப்பட்ட ஷேக் அப்துல்லா, நேருவின் நண்பர். அவர்
1948_ல் காஷ்மீர் பிரதமராக (முதல்_அமைச்சராக) பொறுப்பேற்றார்.
இந்தியாவுக்கு ஆதரவாக இருந்த அவர், படிப்படியாக தன் குரலை மாற்றிக்கொண்டு,
காஷ்மீர் தனி சுதந்திர நாடாக இருக்க வேண்டும் என்று பேசத்தொடங்கினார்.
எனவே, 1953 ஆகஸ்டு மாதம் அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். தொடர்ந்து அவர்
கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். காஷ்மீரை சுதந்திர நாடாக்க அவர்
சதி செய்வதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
1964_ல்
நேரு இறப்பதற்கு முன் அவர் விடுதலை செய்யப்பட்டார். நேருவுக்கும்
பாகிஸ்தான் அதிபர் அïப்கானுக்கும் இடையே சமரசம் செய்து வைக்கும்
முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் திடீர் என்று நேரு காலமானதால் சமரச முயற்சி
இடையிலேயே நின்று போயிற்று. 1975_ல் அப்போதைய பிரதமர் இந்திரா
காந்திக்கும், ஷேக் அப்துல்லாவுக்கும் சமரச உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து
மீண்டும் காஷ்மீர் முதல்_ அமைச்சரானார். 1982_ல் ஷேக் அப்துல்லா இறக்கும்
வரை அப்பதவியில் இருந்தார். காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த பிறகு மன்னர்
ஹரிசிங் பாதுகாப்பை கருதி பம்பாயில் குடியேறினார். 1961_ல் மரணம்
அடைந்தார்.
