நீ மேலே உயரும்போது நீ யார் என்று உன் நண்பர்கள் அறிந்து கொள்வார்கள் நீ கீழே போகும்போதுதான் உண்மையான நண்பர்கள் யார் என்று நீ அறிந்து கொள்வாய்...

4.08.2012

ஜெயலலிதா வாழ்க்கைப்பாதை (1)

ஜெயலலிதா வாழ்க்கைப்பாதை

 
தமிழ்த்திரை உலகில் புகழ் மிக்க நட்சத்திரமாகத் திகழ்ந்த சந்தியா _ ஜெயராமன் தம்பதிகளின் இரண்டாவது குழந்தையாக, 1948 பிப்ரவரி 24_ந்தேதி மகம் நட்சத்திரத்தில் ஜெயலலிதா பிறந்தார். ஜெயலலிதா பிறந்தது மைசூர் நகரில் என்றாலும், அவருடைய முன்னோர்கள் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர்கள்.
 
ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமனின் தகப்பனார் பெயர் ரங்காச்சாரி. இவர் மைசூர் மகாராஜாவின் குடும்ப டாக்டர். ஜெயலலிதாவுக்கு 1 வயது ஆனபோது, தந்தை காலமானார். முதலில் பெங்களூர் பிஷப் கார்டன் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் படித்த ஜெயலலிதா, பின்னர் சென்னையில் சர்ச் பார்க் கான்வென்டில் படிப்பைத் தொடர்ந்தார்.
 
படிப்பில் முதல் மாணவியாகத் திகழ்ந்தார். படிக்கும்போதே முறைப்படி பரத நாட்டியம் பயின்றார். 12_வது வயதில் அவருடைய நடன அரங்கேற்றம் நடந்தது. பிரபல வித்வான்களிடம் முறைப்படி கர்நாடக சங்கீதத்தைக் கற்றுக்கொண்ட ஜெயலலிதா, இசைக் கருவிகளை மீட்டவும், இனிமையாகப் பாடவும் தேர்ச்சி பெற்றார்.
 
1964_ம் ஆண்டில் மெட்ரிகுலேஷன் தேறிய ஜெயலலிதா, தாய் மொழி தமிழைப்போல் ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம் முதலான பிற மொழிகளையும் சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டார். மேல் படிப்புக்கு ஜெயலலிதா முயற்சி செய்யும்போது, அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டு, திரை உலகப் பிரவேசம் நடந்தது.