நீ மேலே உயரும்போது நீ யார் என்று உன் நண்பர்கள் அறிந்து கொள்வார்கள் நீ கீழே போகும்போதுதான் உண்மையான நண்பர்கள் யார் என்று நீ அறிந்து கொள்வாய்...

8.05.2012

1967 தேர்தல் - காங்கிரசுக்கு எதிராக கூட்டணி அண்ணா அமைத்தார்

1967 தேர்தல் - காங்கிரசுக்கு எதிராக கூட்டணி அண்ணா அமைத்தார்
1967 பொதுத்தேர்தலில் காங்கிரசை தோற்கடிக்க வேண்டும் என்ற உறுதியுடன், எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்த்து, கூட்டணியை தி.மு.கழகத் தலைவர் அண்ணா அமைத்தார்.   கூட்டணி அமைப்பதற்காக, தி.மு.கழகத்தின் மாநில மாநாடு சென்னை விருகம்பாக்கத்தில் 1966 டிசம்பர் 29 ந்தேதி முதல் 4 நாட்கள் நடைபெற்றது.
 
மாநாட்டின் தொடக்க நாளில், பிரமாண்டமான ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம், ஐலண்டு மைதானத்தில் இருந்து புறப்பட்டது. அலங்காரத்தேரில் அண்ணா அழைத்துச் செல்லப்பட்டார். இந்த ஊர்வலத்தில் 10 ஆயிரம் தி.மு.க. தொண்டர்கள் சைக்கிளில் சென்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தி.மு.க. தொண்டர்கள் 400 பஸ்களில் வந்திருந்தனர். அந்த பஸ்களில் அவர்கள் ஊர்வலத்தில் சென்றனர்.
 
சென்னை மாநகராட்சி தி.மு.க. மேயர் சம்பந்தம், துணைமேயர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடந்து சென்றனர். ஊர்வலம் 5 மைல் நீளம் இருந்தது. ஊர்வலம் ஒரு இடத்தை கடக்க 1 மணி நேரம் பிடித்தது. மறுநாள் மாநாட்டு நிகழ்ச்சிகள் நடந்தன.
 
அண்ணா தலைமை தாங்கினார். காங்கிரசுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு, காங்கிரசுக்கு எதிராக அகில இந்திய ரீதியில் "சுதந்திரா கட்சி"யைத் தொடங்கிய ராஜாஜி, இந்த மாநாட்டில் கலந்து கொண்டார். மற்றும் "காயிதே மில்லத்" இஸ்மாயில் சாகிப் (முஸ்லிம் லீக்), சி.பா.ஆதித்தனார் (நாம் தமிழர்), ம.பொ.சிவஞானம் (தமிழரசு கழகம்), மூக்கையா தேவர் (பார்வர்டு பிளாக்) ஆகியோரும் ஒரே மேடையில் அமர்ந்து இருந்தனர்.  
 
மாநாட்டில் ராஜாஜி பேசியதாவது:-
 
"மாநாட்டு அமைப்பு இவ்வளவு பிரமாதமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஏதோ மாயத்தால் செய்தது போல் இருக்கிறது. தேர்தலிலும் மாயம் செய்து வெற்றி பெறவேண்டும். நான் தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து இருக்கிறேன். முன் சரித்திரங்களைப் பார்த்தால் இது ஆச்சரியமாக இருக்கும்.
 
இந்த கூட்டு சரித்திரத்தில் பதிவாகும். தேர்தலில் வெற்றியும் கிடைத்தால் நன்றாக பதிவாகும். "காங்கிரஸ் கட்சி படுத்துக்கொண்டே வெற்றி பெறும்" என்று காமராஜர் கூறுகிறார். படுப்பது நிச்சயம். ஆனால் வெற்றி பெறுவது சந்தேகம். காங்கிரஸ்காரர்களுக்கே காங்கிரஸ் வெற்றி பெறுவதில் சந்தேகம்.
 
சந்தேகம் இருக்கும்போது வெளியில் தைரியமாக பேசுவார்கள். அதுபோல் காமராஜரும் தைரியமாக பேசுகிறார். காங்கிரஸ் ஒரு பழம். அது அழுகி விட்டது. துர்நாற்றம் அடிக்க ஆரம்பித்து விட்டது. இனி அதை குப்பை தொட்டியிலே போடவேண்டும். அண்ணாதுரையுடன் நான் கூட்டு சேருகிறேன் என்றதும் காங்கிரசார் "வேடிக்கை" என்று நினைத்தார்கள்.
 
இப்போது எதிர்ப்பு அணியின் பலத்தை தெரிந்து கொண்டார்கள். முயற்சி செய்து கூட்டை உடைக்கப் பார்த்தார்கள். நடக்கவில்லை. காங்கிரஸ் ஏணியில் ஏறி உச்சத்திற்கு சென்று விட்டது. இனி கீழே விழவேண்டியதுதான். இறங்கும்போது நிதானமாக இறங்க வேண்டும். அகம்பாவத்தில் இறங்கினால் தலைகீழாக விழவேண்டியதுதான்.
 
ஆட்சியை ஜனநாயக முறையில் இறக்காமல் பலாத்கார முறையில் இறக்க வழி இல்லை. ஓட்டு மூலம்தான் இறக்கவேண்டும். படுத்துக்கொண்டே வெற்றி பெறுவேன் என்று கூறியதன் முடிவை, 1967ல் ஓட்டு எண்ணும்போது காங்கிரசார் பார்க்கப்போகிறார்கள். தேர்தலில் காங்கிரசை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்றுவோம். அதற்கு நீங்கள் எல்லோரும் பாடுபடவேண்டும்.
 
மேற்கண்டவாறு ராஜாஜி கூறினார்.
 
முஸ்லிம் லீக் தலைவர் இஸ்மாயில் சாகிப் கூறியதாவது:-
 
இனி காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வராது. காங்கிரஸ் ஆட்சியை இனியும் சகித்துக்கொள்ளும் பொறுமை மக்களுக்கு இல்லை. காங்கிரஸ் ஒரு யானையாக இருந்தது. அது நன்றாக இருந்த காலத்தில் அதை அலங்கரித்து ஊர்வலம் விட்டு கண்டுகளித்தார்கள். இப்போது புண் ஏற்பட்டு நோய் கண்டுவிட்டது. அதனால் அந்த யானையை வங்கக் கடலில் தள்ளி அழித்து விடப்போகிறார்கள்.
 
இவ்வாறு இஸ்மாயில் சாகிப் கூறினார்.
 
மூக்கையா தேவர் பேசுகையில், "காங்கிரஸ் என்ற விஷப்பாம் பின் தோலை உரிக்க வேண்டும். காங்கிரஸ் பாம்பின் தோலை, பக்குவமாக அண்ணா உரித்து எடுத்து விடுவார்" என்று கூறினார். சி.பா.ஆதித்தனார், ம.பொ.சிவஞானம் மற்றும் பல தலைவர்கள் பேசினார்கள்.
 
மாநாட்டுக்குத் தலைமை தாங்கி அண்ணா பேசியதாவது:-
 
எப்படியாவது ஆட்சியில் போய் உட்கார்ந்து விடுவது அல்ல நம் நோக்கம். தரணியிலே தமிழகம் தலை நிமிர்ந்து வாழ வேண்டும். அந்த வாய்ப்பு, காலத்தால் என் கையில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. "ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்" என்று மக்கள் கூறினால், "ஆகட்டும்" என்று ஏற்றுக்கொள்வோம். இதற்குக் காரணம் பதவியில் லாபம் சுவை இருக்கிறது என்பதல்ல.
 
நாம் ஆட்சியில் அமர்ந்தால் தமிழ் மரபு காப்பாற்றப்படும் என்ற எண்ணம் தான். இனத்தையும், மொழியையும் காப்பாற்றத்தான் அரசியலில் ஈடுபட்டு இருக்கிறேன். மற்றபடி மந்திரிசபை அமைத்து, கருணாநிதிக்கு ஒரு மந்திரி பதவியும், நெடுஞ்செழியனுக்கு ஒரு மந்திரி பதவியும் கொடுப்பதற்கு அல்ல. அரசியலில் நான் ராஜாஜியை கண்டித்தது போல் வேறு யாரையும் கண்டித்தது இல்லை.
 
அவர் இன்று நம்மை வாழ்த்துகிறார். நினைத்தால் வேடிக்கையாக விசித்திரமாக இருக்கிறது. "விதி வகுத்தது" என்று சொல்வார்களே அதுபோல் இருக்கிறது. ராஜாஜி வாழ்த்துவது என்றால் சம்பிரதாயத்துக்காக அவர் வாழ்த்தவில்லை. உள்ளத்தில் இருந்து வாழ்த்துகிறார். இது ஒரு அரசியல் திருப்பம். நம்முடன் உடன்பாட்டுக்கு வராமல் இருக்கும் கட்சிகளுக்கு சொல்கிறேன்:
 
"காங்கிரசை வீழ்த்தும் பொது நோக்குடன் எங்களுடன் வாருங்கள். இடம் ஒதுக்கும் பொறுப்பை என்னிடம் விட்டுவிடுங்கள். நான் சொல்கிற இடத்தில் 6 பேர் நின்றால் 4 பேர் வெற்றி பெறுவீர்கள். 10 பேர் நின்றால் 8 பேர் வெற்றி பெறுவீர்கள்."
 
மேற்கண்டவாறு அண்ணா கூறினார்.