நீ மேலே உயரும்போது நீ யார் என்று உன் நண்பர்கள் அறிந்து கொள்வார்கள் நீ கீழே போகும்போதுதான் உண்மையான நண்பர்கள் யார் என்று நீ அறிந்து கொள்வாய்...

4.08.2012

இந்தியாவில் தயாரான முதல் படம்

இந்தியாவில் தயாரான முதல் படம்

 
இந்தியாவில் தயாரான முதல் படம் "அரிச்சந்திரா" 1913_ல் வெளிவந்தது. மேல் நாட்டில் தயாரான ஊமைப்படங்கள், இந்தியாவிலும் திரையிடப்பட்டன. இந்தியாவில் ரிலீஸ் செய்யப்பட்ட முதல் திரைப்படத்தின் பெயர் "ஏசுவின் வாழ்க்கை". இந்த ஊமைப்படம், 1896_ம் ஆண்டு பம்பாயில் (இன்றைய மும்பை) திரையிடப்பட்டது. 
 
"ஏசுவின் வாழ்க்கை" படத்தை இந்தியாவுக்குக் கொண்டு வந்தவர் டுபான்ட் என்ற பிரெஞ்சுக்காரர். அவர், இந்தியாவின் ஒவ்வொரு நகரமாக அந்த பிலிம் பிரதியைக் கொண்டு வந்து திரையிட்டார். திரையில் மனிதர்கள் ஓடுவதையும், ஆடுவதையும் கண்டு மக்கள் பிரமித்தனர். டுபான்ட், திருச்சிக்கு வந்து அப்படத்தை திரையிட்டார்.
 
அங்கு அப்படத்துக்கு ஏக வரவேற்பு. திருச்சியில் படம் ஓடிக்கொண்டிருந்த சமயத்தில், பிரெஞ்சுக்காரருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனவே, தாயகம் திரும்ப விரும்பினார். திருச்சியில், ரெயில்வே இலாகாவில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சாமிக்கண்ணு வின்சென்ட் என்பவர், "ஏசுவின் வாழ்க்கை" படத்தை பல முறை பார்த்து ரசித்தவர்களில் ஒருவர்.
 
டுபான்ட், பிரான்சுக்குத் திரும்பப் போகிறார் என்பதை அறிந்ததும் அவரை சந்தித்தார். ரூ.2 ஆயிரம் கொடுத்து "ஏசுவின் வாழ்க்கை" திரைப்பட பிரதியையும், படம் காட்டும் கருவியையும் வாங்கிக்கொண்டார். ரெயில்வே வேலையை ராஜினாமா செய்துவிட்டு, ஊர் ஊராகச் சென்று டூரிங் தியேட்டர் அமைத்து அந்தப் படத்தை திரையிட்டார்.
 
வசூல் குவிந்தது.   இதற்கிடையே, மேல் நாட்டில் இருந்து மேலும் பல ஊமைப்படங்கள் இந்தியாவுக்கு வந்தன. சார்லி சாப்ளின் படங்களும் வரலாயின. இதனால் படங்களைத் திரையிட, முக்கிய ஊர்களில் நிரந்தர சினிமா கொட்டகைகளும், டூரிங் தியேட்டர்களும் அமைக்கப்பட்டன.  
 
"ஏசுவின் வாழ்க்கை" படத்தின் மூலம் நிறைய பணம் சம்பாதித்த சாமிக்கண்ணு வின்சென்ட், அவருடைய சொந்த ஊரான கோவையில் 1914_ம் ஆண்டு நிரந்தர சினிமா கொட்டகையை கட்டினார். அந்த தியேட்டரின் பெயர் "வெரைட்டி ஹால்". தென் இந்தியாவின் முதல் நிரந்தர சினிமா கொட்டகை இதுதான். (தற்போது "டிலைட்" என்ற பெயரில் இந்த தியேட்டர் நடைபெறுகிறது.)
 
இதன்பின் சென்னையிலும், மற்ற இடங்களிலும் தியேட்டர்கள் தோன்றின. சென்னையில் கட்டப்பட்ட முதல் தியேட்டர் "கெயிட்டி". இதை கட்டியவர் பெயர் வெங்கையா. நவீன உத்திகள் உரையாடல் இல்லாமல் திரையில் ஊமைப்படம் ஓடிக் கொண்டிருந்ததால், ரசிகர்கள் சலிப்பு அடைவார்கள் அல்லவா? அதனால் தியேட்டர்காரர்கள் புதுப்புது உத்திகளைக் கையாள ஆரம்பித்தனர்.
 
படம் ஓடுவது இடையிடையே நிறுத்தப்படும். ஒருவர் மேடை மீது ஏறி படத்தின் கதையைச் சொல்வார். கவர்ச்சி நடனங்கள், குஸ்தி, நகைச்சுவை நிகழ்ச்சி முதலியவையும் நடைபெறுவது உண்டு! வெளிநாடுகளில் தயாரான ஊமைப்படங்கள் இந்தியாவில் வசூலைக் குவித்ததால், "நாமும் படம் தயாரிக்கலாம்" என்ற நம்பிக்கையும், தைரியமும் இந்தியாவில் சிலருக்கு ஏற்பட்டது.
 
அப்படிப்பட்டவர்களில், முதன் முதலாகப் படத்தயாரிப்பில் இறங்கியவர் தாதாசாகிப் பால்கே. (இந்திய திரைப்பட உலகின் தந்தை என்று தாதாசாகிப் பால்கே போற்றப்படுகிறார். திரைப்படத் துறையினருக்கு ஆண்டு தோறும் மத்திய அரசு வழங்கும் மிக உயரிய விருதுக்கு, பால்கேயின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.)   வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட "ஏசுவின் வாழ்க்கை" என்ற ஊமைப்படம், இந்தியாவில் சக்கை போடு போட்டது.
 
அதைப் பார்த்த பால்கே, "இதுபோல் நாமும் படம் தயாரித்தால் என்ன?" என்று நினைத்தார். அவர் ஓவியம், நாடகம் முதலிய கலைகளில் நாட்டம் உடையவர். படம் தயாரிக்க அவர் தந்தையும் ஊக்கம் அளித்தார். இந்தியாவில் பட்டி தொட்டி எங்கும் நாடகமாக நடிக்கப்பட்டு வந்த "அரிச்சந்திரன்" கதையை படமாக தயாரிக்க முடிவு செய்தார்.
 
லண்டனுக்கு சென்று, படத்தயாரிப்புக்கான பயிற்சி பெற்று, படத்தயாரிப்பு கருவிகளையும் வாங்கிக் கொண்டு திரும்பினார். தன் வீட்டையே ஸ்டூடியோவாக மாற்றினார். படத்தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டார். செலவை சமாளிக்க முடியாமல், வட்டிக்குப் பணம் வாங்கினார். அவர் மனைவி, கணவரின் முயற்சிகளுக்கு உறு துணையாக இருந்தார்.
 
தன் நகைகளை கழற்றிக் கொடுத்தார். அவைகளை அடகு வைத்து, படத்தைத் தயாரித்தார். பகலில் படப்பிடிப்பு நடக்கும். இரவில் எடிட்டிங் போன்ற பணிகளை பால்கே கவனிப்பார்.   சுமார் 3,700 அடி நீளத்தில், "அரிச்சந்திரா" தயாராகி முடிந்தது. 1913_ம் ஆண்டு மே மாதம் 5_ந்தேதி பம்பாய் கார்னேஷன் தியேட்டரில் படம் ரிலீஸ் ஆகியது.
 
படம் பெரிய வெற்றி பெற்றது. உற்சாகம் அடைந்த பால்கே, "பஸ்மாசுர மோகினி", "சாவித்திரி", "லங்காதகனம்", "கிருஷ்ண ஜனனம்" என்று வரிசையாக படங்கள் எடுத்துத் தள்ளினார். 1914_ல் லண்டன் சென்று, தனது "அரிச்சந்திரா" படத்தையும் மற்றும் சில படங்களையும் திரையிட்டுக் காட்டினார்.
 
லண்டன் பத்திரிகைகள், அந்தப் படங்களையும், பால்கேயையும் பாராட்டி எழுதின. சிலர், பால்கேயை பங்குதாரராகச் சேர்த்துக்கொண்டு படம் தயாரிக்க விரும்பினர். ஆனால், பால்கே சம்மதிக்கவில்லை. படத்தயாரிப்பு கருவிகள் சிலவற்றை வாங்கிக் கொண்டு இந்தியா திரும்பினார். முதலாம் உலகப்போரின் போது, படத்தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டது.
 
40 படங்களைத் தயாரித்த பால்கே, பேசும் படங்கள் வரத்தொடங்கிய பின் போட்டியை சமாளிக்க முடியாமல் படத்தயாரிப்பை நிறுத்தினார். கடைசி காலத்தில் வறுமையில் வாடினார். 1944_ம் ஆண்டு பிப்ரவரி 16_ந்தேதி தனது 64_வது வயதில் பால்கே மறைந்தார். இந்தியாவின் முதல் பேசும் படம் "ஆலம் ஆரா".
 
பம்பாயைச் சேர்ந்த அர்தேஷ் இரானி என்ற பட அதிபர் இப்படத்தை இந்தியில் தயாரித்தார். மாஸ்டர் விட்டல் கதாநாயகனாகவும், ஜுபிதா கதாநாயகியாகவும் நடித்தனர். 7 பாடல்கள் இடம் பெற்று இருந்தன. 1931 மார்ச் 14_ந்தேதி பம்பாயில் உள்ள "மெஜஸ்டிக் சினிமா" என்ற தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டது.
 
இந்தியாவின் இந்த முதல் பேசும் படம் மகத்தான வெற்றி பெற்றது. வசூல் குவிந்தது. இதன் காரணமாக, பலர் படத்தயாரிப்பில் இறங்கினர். 1931_ல் மட்டும் 23 இந்திப் படங்கள் வெளிவந்தன.