நீ மேலே உயரும்போது நீ யார் என்று உன் நண்பர்கள் அறிந்து கொள்வார்கள் நீ கீழே போகும்போதுதான் உண்மையான நண்பர்கள் யார் என்று நீ அறிந்து கொள்வாய்...

4.08.2012

'தியாக பூமி' படத்துக்கு தடை பிரிட்டிஷ் அரசு நடவடிக்கை

'தியாக பூமி' படத்துக்கு தடை பிரிட்டிஷ் அரசு நடவடிக்கை
'சதிலீலாவதி' படம் திரைக்கு வந்து வெற்றி பெற்ற பிறகு கூட, சினிமா தொழில் மீது எஸ்.எஸ்.வாசனுக்கு ஆர்வம் ஏற்படவில்லை. 'பத்திரிகைத் தொழிலே போதும்' என்றிருந்தார்.
 
'தியாகபூமி'யில் எஸ்.டி.சுப்புலட்சுமி, பாபநாசம் சிவன், பேபி சரோஜா. இந்த சமயத்தில், வாசனை டைரக்டர் கே.சுப்பிரமணியம் சந்தித்தார். திரைப்படத்துக்காகவே 'கல்கி' எழுதியுள்ள 'தியாகபூமி' கதையை, தான் திரைப்படமாக்க விரும்புவதாக தெரிவித்தார். படப்பிடிப்பு நடைபெறும்போது எடுக்கப்படும் ஸ்டில்களோடு 'தியாகபூமி'யை ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியிடுவது என்று வாசனும், சுப்பிரமணியமும் முடிவு செய்தனர்.
 
அதன்படி, 'தியாகபூமி' படத்தின் கதை, ஆனந்த விகடனில் சினிமா ஸ்டில்களுடன் தொடராக வெளியாயிற்று. இந்த உத்தி, அகில இந்தியாவிலும் முதல் முறையாக அறிமுகப்படுத்தப் பட்டு வெற்றி பெற்றது. கதையை வாசகர்கள் விரும்பிப் படித்தனர். எனவே, 'ஜெமினி பிக்சர்ஸ் சர்க்ïட்' என்ற பட விநியோக நிறுவனத்தை வாசன் தொடங்கி, 'தியாகபூமி'யின் விநியோக உரிமையைப் பெற்றார்.
 
கதாநாயகி சாவித்திரியாக எஸ்.டி.சுப்புலட்சுமியும், கதாநாயகன் ஸ்ரீதரனாக கே.ஜே.மகாதேவனும் நடித்தனர். (பிற்காலத்தில், கே.ஜே.மகாதேவன் டைரக்டராகி, 'ராஜி என் கண்மணி', 'ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்' உள்பட சில படங்களை டைரக்ட் செய்தார்.) தியாகபூமியின் கதைச் சுருக்கம் வருமாறு:- கதாநாயகி சாவித்திரி கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள். அதிகம் படிக்காதவள். கதாநாயகன் ஸ்ரீதரன் மேல் நாட்டில் படித்தவன்.
 
தாயாரின் வற்புறுத்தலால், சாவித்திரியை மணக்கிறான். அவனுக்கு ஏற்கனவே ஒரு வெள்ளைக்காரப் பெண்ணுடன் காதல் உண்டு. புகுந்த வீட்டில், சாவித்திரி பல கொடுமைகளை அனுபவிக்கிறாள். அவள் தன் தந்தை சம்பு சாஸ்திரிக்கு (பாபநாசம் சிவன்) எழுதும் கடிதங்களை, சித்தி எரிந்து விடுகிறாள். மாமியார் வீட்டில் இருந்து விரட்டப்படும் சாவித்திரி, ஒரு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தைக்கு (பேபி சரோஜா) தாய் ஆகிறாள். குழந்தையுடன் அவள் தற்கொலை செய்து கொள்ள முயல, அங்கே தந்தை சம்பு சாஸ்திரியின் குரல் கேட்க, குழந்தையை விட்டு விட்டு சென்று விடுகிறாள்.
 
அக்குழந்தையை, தன் சொந்த பேத்தி என்று அறியாமலேயே, சாருமதி என்று பெயரிட்டு வளர்க்கிறார், சம்பு சாஸ்திரி. சாவித்திரி, பம்பாய் சென்று தன் பணக்கார அத்தையின் உதவியினால் உயர் கல்வி பயில்கிறாள். ஏராளமான சொத்துக்களுடன், நாகரீக மங்கையாக 'உமாராணி' என்ற பெயரில் புகழ் பெற்று விளங்குகிறாள். ஐந்தாண்டுகள் உருண்டோடுகின்றன. தன் மகள் என்று தெரியாமலேயே சாருமதியை சந்தித்து பாசம்கொள்கிறாள், உமாராணி (சாவித்திரி). மோசடி குற்றத்துக்காக கைது செய்யப்படும் ஸ்ரீதரனை மீட்கிறாள். தன் மனைவி சாவித்திரிதான் உமாராணி என்பதை அறியும் ஸ்ரீதரன், அவளுடன் மீண்டும் வாழ விரும்புகிறான்.
 
ஆனால், அவன் கோரிக்கையை சாவித்திரி நிராகரிக்கிறாள். அவள் தன்னுடன் வாழவேண்டும் என்று கோர்ட்டில் வழக்குத் தொடருகிறான், ஸ்ரீதரன். ஆனால் சாவித்திரியோ, 'கர்ப்பிணி என்றும் பாராமல் என்னை விரட்டி அடித்த அவருடன் இனி வாழமாட்டேன்.
 
வேண்டுமானால், நான் வசதியுடன் இருப்பதால் அவருக்கு ஜீவனாம்சம் தருகிறேன்' என்று கோர்ட்டில் கூறுகிறாள். இறுதியில், சுதந்திரப் போரில் ஈடுபட்டு சிறை செல்கிறாள், சாவித்திரி. ஸ்ரீதரனும், சுதந்திரப் போராட்டத்தில் சிறை செல்கிறான். பிரிந்த குடும்பம் ஒன்று சேருகிறது.   இது யார் தெரிகிறதா? டைரக்டர் கே.சுப்ரமணியம்தான்! 'அனந்த சயனம்' என்ற படத்தில் அவர் கதாநாயகனாக நடித்தார். 1939-ம் ஆண்டு மே 20-ந்தேதி சென்னையில் கெயிட்டி, ஸ்டார் ஆகிய திரையரங்குகளில் 'தியாக பூமி' திரையிடப்பட்டது. கதை அமைப்பு, நடிப்பு, டைரக்ஷன் எல்லாவற்றிலும் படம் சிறப்பாக அமைந்திருந்தது.
 
டி.கே.பட்டம்மாளின் தேச பக்திப் பாடல்கள் கணீர் என்று ஒலித்தன. ஏற்கனவே 'பாலயோகினி' படத்தின் மூலம் புகழ் பெற்று விளங்கிய பேபி சரோஜா, இந்தப் படத்திலும் சிறப்பாக நடித்துப் பெண்களைக் கவர்ந்தார். 'ஆணுக்குப் பெண் அடிமை இல்லை' என்ற கருத்தை மையமாகக் கொண்டிருந்ததால், படத்தை பெண்கள் மிகவும் விரும்பிப் பார்த்தனர். 'தியாகபூமி புடவை', 'தியாகபூமி வளையல்' என்ற பெயர்களில் சேலைகளும், வளையல்களும் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டன.
 
படத்தில் இடம் பெற்றிருந்த தேச பக்திப் பாடல்கள், சுதந்திரப் போராட்ட காட்சிகள் காரணமாக, இந்தப் படத்துக்கு பிரிட்டிஷ் அரசு தடை விதித்தது. தடை உத்தரவு வரப்போகிறது என்பது முந்தின நாள் தெரிந்து விட்டதால், படத்தை விடிய விடிய மக்களுக்கு இலவசமாகக் காண்பிக்க, டைரக்டர் சுப்பிரமணியமும், எஸ்.எஸ்.வாசனும் ஏற்பாடு செய்தனர். தியேட்டர் முழுவதும் கூட்டம் நிறைந்து வழிய, படம் இடைவிடாமல் காட்டப்பட்டது. (இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, தடை நீங்கி, 'தியாக பூமி' மீண்டும் திரையிடப்பட்டது)