நீ மேலே உயரும்போது நீ யார் என்று உன் நண்பர்கள் அறிந்து கொள்வார்கள் நீ கீழே போகும்போதுதான் உண்மையான நண்பர்கள் யார் என்று நீ அறிந்து கொள்வாய்...

4.08.2012

முன்னேற்றப்பாதைக்கு அடித்தளம் அமைத்த இந்தியாவின் முதல் பிரதமர் “ரோஜாவின் ராஜா” நேரு

ரோஜாவின் ராஜா என்று அழைக்கப்படும் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 123-வது பிறந்தநாள் இன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
 
குழந்தைகளை கண்டால் நேரு தானும் ஒரு குழந்தையாகவே மாறி அன்பு செலுத்துவார். இதனால்தான் அவருடைய பிறந்தநாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
 
ஆனால் குழந்தை மனம் படைத்த இதே நேருதான் ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து நாட்டை விட்டே வெளியேற செய்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அவர் காட்டிய வீரம், தீரம் இந்திய நாட்டுக்கு விடுதலை கிடைக்க முக்கிய பங்கு வகித்தது.
 
நேரு குடும்பமே சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட தியாக குடும்பமாகும். அவருடைய தந்தை மோதிலால் நேரு, தாயார் சொரூபராணி ஆகியோரும் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். இவர்களின் மகனாக 1889-ம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ந்தேதி நேரு பிறந்தார். இவருடன் விஜயலட்சுமி பண்டிட் உள்பட 3 சகோதரிகள் பிறந்தனர்.
 
நேரு குடும்பம் உத்திரபிரதேசம் மாநிலம் அலகாபாத்தில் வசித்து வந்தது. நேருவின் தந்தை மோதிலால் நேரு பாரிஸ்டர் பட்டம் பெற்று அலகாபாத்தில் வக்கீல் தொழில் செய்து வந்தார். இதனால் அலகாபாத்தில் அவருடைய குடும்பம் புகழ்பெற்ற வசதி படைத்த குடும்பமாக திகழ்ந்து வந்தது.
 
நேரு தனது 15-வது வயதில் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டு பள்ளியில் சேர்க்கப்பட்டார். அங்கு ஹாரோ பள்ளியில் உயர்நிலை படிப்பை படித்த அவர் பின்னர் ஹேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள டிரினிட்டி சட்டக்கல்லூரியில் பாரிஸ்டர்(வக்கீல்) பட்டம் பெற்றார். 7 ஆண்டுகள் இங்கிலாந்தில் தங்கி கல்வி பயின்ற அவர் 1912-ம் ஆண்டு இந்தியா திரும்பினார்.
 
உடனே அலகாபாத் கோர்ட்டில் வக்கீல் பணியை தொடங்கினார். 1916-ம் ஆண்டு நேருவுக்கு திருமணம் நடந்தது. 16 வயது கமலாபாயை மணந்தார். முதல் ஆண்டிலேயே அவர்களுக்கு பெண் குழந்தை (இந்திராகாந்தி) பிறந்தது. தந்தையைப்போல நேருவுக்கும் சுதந்திர போராட்டத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. காந்தி தலைமையிலான சுதந்திர போராட்டம் அவரை ஈர்த்தது.
 
அப்போது ரவுலட் சட்டத்தை எதிர்த்து மகாத்மா காந்தி நாடு தழுவிய போராட்டம் நடத்தி கொண்டிருந்தார். அதில் நேரு தீவிரமாக ஈடுபட்டார். இதனால் மகாத்மா காந்திக்கு நேரு மீது பற்றுதல் ஏற்பட்டது.
 
1920-ம் ஆண்டு நடந்த ஒத்துழையாமை இயக்க போராட்டத்தில் நேரு தீவிரமாக கலந்து கொண்டார். இதனால் முதன்முறையாக ஆங்கிலேயர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். சில மாதங்களுக்கு பிறகு அவர் விடுதலையானார்.
 
1924-ம் ஆண்டு அலகாபாத் நகரசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2 வருடம் இந்த பதவியில் இருந்தார். 1926-ம் ஆண்டு காங்கிரசின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1936-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1935-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுவது என்று முடிவு செய்தது. அப்போது நேரு போட்டியிடவில்லை. ஆனால் நாடு முழுவதும் சுற்று பயணம் செய்து பிரசாரம் செய்தார்.
 
1942-ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் நேரு தீவிரமாக ஈடுபட்டதால் அவர் கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகள் ஜெயிலில் அடைக்கப்பட்டார். 1945-ல் விடுதலையாகி வெளியே வந்த அவர் மீண்டும் சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக குதித்தார்.
 
இந்த போராட்டத்தின் விளைவாக 1947-ல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. இந்தியாவின் முதல் பிரதமராக நேரு தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமர் பதவிக்கு வந்ததுமே நாட்டை எந்த வகையில் முன்னேற்றலாம் என்று திட்டம் தீட்டினார். இதற்காக திட்ட கமிஷன் என்ற அமைப்பை உருவாக்கினார்.
 
அறிவியல் தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்காக தொழில்நுட்ப குழுவை அமைத்தார். ஐந்தாண்டு திட்டங்களை உருவாக்கினார். விவசாயமும், தொழில் துறையும் ஒரே சீராக வளர்ச்சியடைய அதற்கான பிரத்யேக திட்டங்களை கொண்டு வந்தார்.
 
தொழிற்சாலைகள்தான் இந்தியாவின் கோவில் என்று கூறிய அவர் பெரிய தொழிற்சாலைகள் பல உருவாவதற்கு காரணமாக இருந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் உலக நாடுகள் அனைத்தும் 2 பிரிவாக பிரிந்து கிடந்தன. ஆனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளை ஒன்றிணைத்து அணிசேரா அமைப்பை உருவாக்கினார். அவர் உருவாக்கிய பஞ்சசீல கொள்கைகள் உலக அளவில் பாராட்டப்பட்டது.
 
இந்தியாவின் வளர்ச்சிக்கு அணுசக்தி மிகவும் அவசியம் என்று கருதிய அவர் அணுசக்தி கழகத்தை உருவாக்கினார். உயர் தொழில்நுட்ப கல்விகள் இருந்தால்தான் நாட்டை முன்னேற்ற முடியும் என்று நினைத்த அவர் அகில இந்திய மருத்துவக்கழகம், ஐ.ஐ.டி. கல்லூரி, இந்தியா வேளாண்மை கல்லூரி, தேசிய தொழில்நுட்ப கல்லூரி போன்றவற்றை உருவாக்கினார்.
 
17 வருடம் தொடர்ந்து பிரதமராக இருந்து நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்து சென்ற நேரு 1964-ம் ஆண்டு மே மாதம் 27-ந்தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்தியா இன்று உலக அளவில் தலைநிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு நேரு அமைத்த அடித்தளம்தான் காரணம்.