நீ மேலே உயரும்போது நீ யார் என்று உன் நண்பர்கள் அறிந்து கொள்வார்கள் நீ கீழே போகும்போதுதான் உண்மையான நண்பர்கள் யார் என்று நீ அறிந்து கொள்வாய்...

4.08.2012

இந்திரா காந்தி கைது-கோர்ட்டு விடுதலை செய்தது

ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது முதலே இந்திரா காந்தி மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இந்திரா காந்தி வெளிநாட்டுக்கு ஓடிப்போய் விடுவார் என்று கூறி அவருடைய பாஸ்போர்ட்டை முடக்கி வைத்தது. உண்மையில் நேரு இறந்த பின் அரசியலை விட்டு விலகி லண்டனில் குடியேற இந்திரா திட்டமிட்டார். அதை தடுத்து நிறுத்தியவர் காமராஜர்.
 
"உங்கள் சேவை நாட்டுக்குத் தேவை" என்று கூறி அவர் மனதை மாற்றி சாஸ்திரி மந்திரிசபையில் இடம் பெறச்செய்தார். சாஸ்திரி இறந்ததும் இந்திராவை பிரதமராக்கினார். தேர்தலில் தோற்ற இந்திரா காந்தி அரசியலை விட்டு ஒதுங்க நினைக்கவில்லை. நெருக்கடி நிலையின்போது நடந்த தவறுகளுக்காக மனம் வருந்தியதோடு மீண்டும் மக்களின் ஆதரவைப் பெற கடுமையாக உழைக்கத் தீர்மானித்தார்.
 
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது சப்தர்ஜங் ரோட்டில் 1_ம் எண் வீட்டில் வசித்து வந்தார். இது பிரதமருக்குரிய பெரிய பங்களா அல்ல. மந்திரிகள் அல்லது அதிகாரிகளுக்கு உரிய வீடுதான். அங்கு மொரார்ஜி தேசாய் குடி வர விரும்புவதாகவும் எனவே வீட்டை உடனே காலி செய்யும்படியும் இந்திராவிடம் அதிகாரிகள் கெடுபிடி செய்தனர். தன் மகன்களுடனும் மருமகள்களுடனும், பேரக்குழந்தைகளுடனும் ஒரே வீட்டில் வசித்து வந்த இந்திரா, எங்கே குடிபோவது என்று திகைத்தார். ஏனென்றால், அலகாபாத்தில் உள்ள பூர்வீக வீடான "ஆனந்த பவனம்" கூட ஏற்கனவே நாட்டு மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டு விட்டது.
 
நல்லவேளையாக, இந்திரா காந்தியின் நீண்ட கால குடும்ப நண்பர் முகமது யூனுஸ், வெல்லிங்டன் கிரசண்ட் ரோட்டில் உள்ள தன் வீட்டை உடனடியாக காலி செய்து இந்திராவுக்குத் தர முன்வந்தார். இந்த வீட்டில்தான் மூன்று ஆண்டுகளுக்கு முன் சஞ்சய் _ மேனகா திருமணம் நடந்தது. இந்திரா காந்தியின் உதவியாளர்கள் எல்லாம் வெளியேறிவிட்டனர். தனி செயலாளர் ஆர்.கே.தவான் மட்டும் "உங்களிடம் சம்பளம் இல்லாமல் வேலை பார்க்கிறேன்" என்று விசுவாசத்துடன் கூறினார்.
 
இந்திரா காந்தி உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற நிலை இருந்ததால் அவருக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அந்த பாதுகாப்பை குறைக்கும்படி மொரார்ஜி கட்டளையிட்டார். "இந்திரா இப்போது சாதாரண பிரஜைதான். அவருக்கு குறைந்த அளவு பாதுகாப்பு போதும்" என்று கூறினார். "நெருக்கடி நிலை"யின்போது நடந்த அத்துமீறல்கள் பற்றி விசாரணை நடத்த, சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ஜே.சி.ஷா தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
 
இந்திரா காந்தியை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று உள்துறை மந்திரி சரண்சிங்கும் சுகாதார மந்திரி ராஜ்நாராயணனும் துடித்தனர். "அவசரப்படாதீர்கள். நிதானமாகச் செயல்படுங்கள்" என்று மொரார்ஜி தேசாய் கூறினார். சட்ட மந்திரி சாந்தி பூஷனும் பிரதமரின் கருத்தை ஆதரித்தார். ஆயினும் இந்திரா காந்தியைக் கைது செய்வதில் சரண்சிங் உறுதியாக இருந்தார்.
 
அக்டோபர் 2_ந்தேதி அவர் சி.பி.ஐ. டைரக்டரை அழைத்தார். "இந்திராவைக் கைது செய்யத் தயாராகுங்கள்" என்று கட்டளையிட்டார். இந்திரா காந்தியை எந்த முறையில் கைது செய்வது? அவரை எப்படி நடத்துவது? என்று சி.பி.ஐ. டைரக்டர் கேட்டார். "இந்திரா காந்தி இப்போது சாதாரண பிரஜை. எனவே சாதாரண பிரஜை மாதிரியே அவரை நடத்தவேண்டும்" என்றார் சரண்சிங்.
 
3_ந்தேதி மாலை இந்திரா காந்தியின் வீட்டுக்கு சி.பி.ஐ. போலீசார் சென்றார்கள். "உங்களைக் கைது செய்ய வந்திருக்கிறோம்" என்றார்கள். "அப்படியா? தாராளமாக கைது செய்யுங்கள். கை விலங்கு மாட்டி அழைத்துச் செல்வதாக இருந்தாலும் சரி" என்றார் இந்திரா காந்தி. ஆனால் கை விலங்கு போடாமல் அவரை போலீசார் அழைத்துச்சென்றார்கள். மறுநாள் இந்திரா காந்தி கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டார். அவர் உட்காருவதற்கு நாற்காலி கொண்டு வரப்பட்டது. ஆனால் "நாற்காலி வேண்டாம்" என்று இந்திரா கூறிவிட்டார்.
 
அரசாங்க வக்கீல் தமது வாதத்தில் கூறியதாவது:-

"தேர்தல் பிரசாரத்திற்கு பல வர்த்தக நிறுவனங்களிடமிருந்து பெற்ற ஜீப்களை இந்திராவும் அவர் மகன் சஞ்சய்காந்தியும் பயன்படுத்தினார்கள். பம்பாயில் பெட்ரோல் கிணறுகள் தோண்ட பிரெஞ்சு நிறுவனம் ஒன்றுடன் இந்திரா காந்தி ஒப்பந்தம் செய்தார். இதனால் அரசாங்கத்துக்கு ரூ.11 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இவ்வாறு அரசு வக்கீல் கூறினார்.
 
இந்திரா காந்தி சார்பில் ஆஜரான பிராங்க் அந்தோணி இதற்கு பதிலளித்து கூறியதாவது:-

"இந்திராகாந்தி செய்த ஒப்பந்தத்தினால் ரூ.11 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது வாதத்துக்காக அதை உண்மை என்றே வைத்துக்கொண்டாலும், அந்த 11 கோடியை இந்திரா தன் வீட்டுக்கா எடுத்துச் சென்று விட்டார்? தற்போதைய அரசாங்கம் எடுத்த ஒரு முடிவினால் (மதுவிலக்கு) அரசாங்கத்துக்கு பல நூறு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதே, அதற்காக தற்போதைய பிரதமரைக் குற்றவாளி என்று கூறலாமா? இவ்வாறு பிராங்க் அந்தோணி கேட்டார். முடிவில் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி அன்றைய தினமே இந்திரா காந்தியை நீதிபதி விடுதலை செய்தார். ஒரே நாளில் விடுதலை ஆவோம் என்று இந்திரா காந்தியே நினைக்கவில்லை.