நீ மேலே உயரும்போது நீ யார் என்று உன் நண்பர்கள் அறிந்து கொள்வார்கள் நீ கீழே போகும்போதுதான் உண்மையான நண்பர்கள் யார் என்று நீ அறிந்து கொள்வாய்...

4.08.2012

போர்ச்சுக்கீசிய ஆட்சியில் இருந்து கோவா விடுதலை: இந்திய ராணுவம் போரிட்டு பிடித்தது

போர்ச்சுக்கீசிய ஆட்சியில் இருந்து கோவா விடுதலை: இந்திய ராணுவம் போரிட்டு பிடித்தது

 
இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் மும்பைக்கு அருகில் இருக்கும் கோவா, டையூ_டாமன் ஆகிய பகுதிகள் 1834ம் ஆண்டு முதல் போர்ச்சுக்கல் என்ற வெள்ளைக்கார நாட்டின் ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்தது. 1947ம் ஆண்டு ஆகஸ்டு 15ந்தேதி வெள்ளையர் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றும், கோவா தொடர்ந்து போர்ச்சுக்கீசியர் ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. 
 
இந்த கோவா பகுதியை இந்தியாவுடன் இணைக்க மத்திய அரசும் முடிவெடுத்தது. இதனை அடுத்து 17.12.1961 அன்று நள்ளிரவு இந்தியாவின் முப்படைகளும் கோவாவுக்குள் புகுந்தன. ராணுவம், கப்பல் படை, விமானப்படை இவை மூன்றும் ஒரே சமயத்தில் போரில் ஈடுபடுத்தப்பட்டன.
 
கோவாவுக்குள் இந்தியப்படைகள் நுழைவது என்று முடிவெடுக்கப்பட்டதுமே ராணுவ மந்திரி கிருஷ்ணமேனன் கோவா எல்லைக்கு விமானத்தில் பறந்து சென்றார். அங்கு தயாராக அணிவகுத்து நின்ற வீரர்களிடம், "நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்" என்று கூறி வழியனுப்பி வைத்தார்.
 
பீரங்கி குண்டுகளை முழங்கியபடியே இந்திய ராணுவம் கோவாவுக்குள் நுழைந்தது. ராணுவத்துக்கு உதவியாக விமானப்படை விமானங்கள் பறந்து சென்றன. கோவாவுக்குள் துண்டு நோட்டீசுகளை இந்திய விமானப்படை வீசியது. அதில், "கோவா மக்களை காப்பாற்ற இந்திய படைகள் வந்து இருக்கின்றன. என்ன தியாகம் செய்யவும் அவை தயாராக இருக்கின்றன" என்று அச்சிடப்பட்டு இருந்தன.  
 
கோவா மீதான படையெடுப்பை இந்திய ராணுவ தளபதி கான்டெத் என்பவர் முன்னின்று நடத்தினார். அவருக்கு உதவியாக இருந்து ராணுவ தளபதி ஜே.என்.சவுத்திரி, விமானப் படை தளபதி பின்டோ, கப்பல் படை தளபதி பி.எஸ்.சோமான் ஆகியோர் வழிநடத்தினார்கள். கோவாவுக்குள் இந்திய ராணுவம் நுழைந்ததும் அங்கிருந்த முக்கிய ராணுவ முகாமை பிடித்துக்கொண்டது.
 
அங்கிருந்த போர்ச்சுக்கீசிய வீரர்கள் சரண் அடைந்துவிட்டனர். யுத்தம் தொடங்கியதும் கோவாவில் ஆட்சி பொறுப்பில் இருந்த கவர்னர் ஜெனரலை நீக்கிவிட்டு ராணுவ தளபதி அந்த பொறுப்பை ஏற்றார். இதனால் கவர்னர் ஜெனரல் மனைவி, குழந்தைகளுடன் கோவாவை விட்டு போர்ச்சுக்கல்லுக்கு தப்பி ஓடிவிட்டார்.  
 
ஒரே நாள் யுத்தத்தில் போர்ச்சுக்கீசிய ராணுவம் தோல்வி அடைந்தது. கோவா, டையூ டாமன் பகுதி முழுவதையும் இந்திய ராணுவம் கைப்பற்றியது. தலைநகர் `பஞ்சிம்' நகரில் கவர்னர் ஜெனரல் மாளிகையில் போர்ச்சுக்கீசிய கொடி இறக்கப்பட்டு இந்திய தேசிய கொடி பறக்க விடப்பட்டது.
 
கொடியை இந்திய ராணுவ தளபதி கே.ஆர்.சவுத்திரி ஏற்றினார். அந்த மாளிகை முன்பு திரளான ஆண்களும், பெண்களும் கூடி நின்றனர். அப்போது ஒரு இந்திய விமானம் அங்கு தாழ்வாகப் பறந்தது. விமானத்தில் இருந்த இந்திய வீரர்கள், ஒலிபெருக்கியில் பின்வருமாறு கூறினார்கள்:-
 
"கோவா மக்களே! இன்று உங்கள் வாழ்க்கையில் ஒரு பொன்னாள். உங்களுக்கு விடுதலை கிடைத்து விட்டது! இங்கு வந்துள்ள இந்தியப்படை உங்களுடைய சொந்தப்படை! உங்களை பாதுகாக்கவே நாங்கள் வந்து இருக்கிறோம்!" இவ்வாறு விமானத்தில் இருந்து இந்திய வீரர்கள் அறிவித்த போது மக்கள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். 
 
இந்திய படையை கோவா மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள். பெண்கள் கூட்டம், கூட்டமாக வந்து ராணுவ வீரர்களுக்கு மாலை அணிவித்தனர். இந்தியப் படைகளுடன் போரிட்டு தோல்வி அடைந்த ஆத்திரத்தில் போர்ச்சுக்கீசியர்கள் பல அட்டூழியங்களைச் செய்தார்கள். மறைவான இடங்களில் பதுங்கி இருந்து கொண்டு வீடுகளுக்கு தீ வைத்தார்கள். பெரிய கட்டிடங்களை இடித்து தரைமட்டம் ஆக்கினார்கள்.  
 
போரில் தோல்வி அடைந்த போர்ச்சுக்கீசியர்கள் 2 ஆயிரம் பேர் இந்திய ராணுவத்திடம் சரண் அடைந்தார்கள். இவர்களில் 27 பேர் ராணுவ உயர் அதிகாரிகள். கோவா தலைநகர் "பஞ்சிம்" நகரை இந்திய ராணுவம் பிடித்துக்கொண்டதும், ராணுவத் தளபதி சவுத்திரி விமானத்தில் சென்றார். கவர்னர் ஜெனரல் மாளிகையில் இந்திய கொடியை பறக்கவிட்டார்.
 
தலைநகரில் இருந்த போர்ச்சுக்கீசிய ராணுவம், அவரிடம் சரண் அடைந்தது. அவர்களுடைய சரணாகதியை ஏற்றுக் கொள்ள ஒரு சிறு விழா நடந்தது. இந்திய ராணுவ அதிகாரிகள் கம்பீரமாக நிற்க, போர்ச்சுக்கீசிய தளபதி ராணுவ முறையில் நடந்து வந்து, அவர்கள் எதிரே நின்றார். "நானும், போர்ச்சுக்கீசிய ராணுவமும் சரண் அடைகிறோம்.
 
எங்கள் ஆயுதங்களையும் ஒப்படைக்கிறோம்!" என்று அவர் சொன்னார். "உங்கள் சரணாகதியை ஏற்றுக்கொள்கிறோம்! நீங்கள் உங்கள் முகாமிலேயே இப்போது தங்கி இருக்கலாம்" என்று இந்திய தளபதி சவுத்திரி சொன்னார். உடனே போர்ச்சுக்கீசிய அதிகாரி "சலாம்" போட்டுவிட்டு திரும்பி னார்.   கோவா மீது இந்தியா படையெடுத்ததற்கு, ரஷியா, இந்தோனேஷியா, இலங்கை ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
 
அமெரிக்காவும், இங்கிலாந்தும் வருத்தம் தெரிவித்தன. இந்தியா வெற்றி பெற்ற செய்தி வெளியானதும் பாகிஸ்தான் எரிச்சலடைந்தது. "இந்தியா இரட்டை வேடம் போடுகிறது. உலக சமாதானம் என்று மற்ற நாடுகளுக்கு உபதேசம் செய்துவிட்டு அதுவே யுத்தத்தில் இறங்கிவிட்டது" என்று கண்டனம் தெரிவித்தது. 
 
ஒரே நாளில் கோவாவை கைப்பற்றிய இந்திய ராணுவ வீரர்களை பிரதமர் நேரு பாராட்டினார். "இந்திய ராணுவம் விரைவாகவும், திறமையாகவும் அதன் கடமையை செய்து முடித்தது. இந்திய வீரர்கள் ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும் கடைபிடித்தார்கள். இதனால் சேதம் அதிகம் இல்லாமலேயே நமக்கு வெற்றி கிடைத்தது."
 
இவ்வாறு நேரு சொன்னார்.
 
புதுடெல்லியில் உள்ள கோவா மக்கள், பிரதமர் நேருவை சந்தித்தார்கள். "போர்ச்சுக்கீசியர் ஆதிக்கத்தில் அவதிப்பட்ட எங்களுக்கு விடுதலை வாங்கித்தந்து இருக்கிறீர்கள். இதற்கு அரும்பாடு பட்ட உங்களுக்கும், இந்தியப் படைகளுக்கும் நாங்கள் மிகவும் கடமைப்பட்டு இருக்கிறோம்" என்று மகிழ்ச்சியோடு கூறினார்கள்.   சுதந்திர கோவாவின் முதல் கவர்னராக ராணுவ தளபதி கே.பி.கான்டெத் (யுத்தத்தை முன்னின்று நடத்தியவர்) நியமிக்கப்பட்டார்.